ரொனால்டோவின் சாதனையை முறியடித்த மெஸ்ஸி
ஐரோப்பிய கால்பந்தாட்ட கிளப் அணிகளுக்காக அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனையை மெஸ்ஸி படைத்துள்ளார்.
கிறிஸ்டியானோ ரொனால்டோ 701 கோல் அடித்திருந்தார். இந்த நிலையில் மெஸ்ஸி 702 கோல்கள் அடித்து ரொனால்டோவின் சாதனையை முறியடித்துள்ளார்.
மேலும், ரொனால்டோவை விட 103 போட்டிகள் குறைவாக விளையாடி அதிக கோல்கள் அடித்து மெஸ்ஸி சாதனை படைத்துள்ளார்.
பிரெஞ்ச் லீக் கால்பந்து தொடர்
பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் பிரெஞ்ச் லீக் கால்பந்து தொடரில் மெஸ்ஸியின் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணியும், நைஸ் அணியும் மோதின.
பரப்பரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பிஎஸ்ஜி அணி 2-0 என்ற கோல் கணக்கில் நைஸ் அணியை வென்றது.
மெஸ்ஸி, நைஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 26வது நிமிடத்தில் அபாரமாக கோல் அடித்து அசத்தினார். தொடர்ந்து 76வது நிமிடத்தில் சக வீரர் செர்ஜியோ ராமோஷ் கோல் போடவும் உதவினார்.
இதன்மூலம் தொடர்ந்து 14 போட்டிகளாக தோல்வியை சந்திக்காமல் முன்னேறி வந்த நைஸ் அணியை தோற்கடித்து, பிஎஸ்ஜி அணி 6 புள்ளிகள் முன்னிலையுடன் பிரெஞ்ச் லீக்கில் முதல் இடத்தை தக்க வைத்துள்ளது.
702 கோல்கள்
அதேவேளையில் நைஸ் அணிக்கு எதிரான போட்டியில் கோல் அடித்ததன் மூலம் ஐரோப்பிய கால்பந்து தொடரில் அதிக கோல்கள் அடித்த வீரரான கிறிஸ்டியானோ ரொனோல்டோவின் சாதனையை முறியடித்துள்ளார் மெஸ்ஸி.
போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 949 போட்டிகளில் 701 கோல் அடித்திருக்கிறார். இந்நிலையில் மெஸ்ஸி 846 போட்டிகளில் மட்டுமே பங்கேற்று 702 கோல்கள் அடித்திருக்கிறார்.
ரொனால்டோவை விட 103 போட்டிகள் குறைவாக விளையாடி அதிக கோல்கள் அடித்து மெஸ்ஸி இந்த சாதனையை படைத்துள்ளதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இவற்றில் மெஸ்ஸி தனது கால்பந்து வாழ்க்கையை துவங்கிய பார்சிலோனா அணிக்காக 672 கோல்களும், பிஎஸ்ஜி அணிக்காக 30 கோல்களும் அடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.