பலவந்தமாக அகற்றப்பட்ட ஞானசாரவின் உடை.. அரச தரப்பு தொடர்பில் கம்மன்பில கிளப்பும் சர்ச்சை
சிறையில் இருந்தபோது கலகொடத்தே ஞானசார தேரரின் காவி உடை பலவந்தமாக அகற்றப்பட்டதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இன்று (12) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஞானசார தேரரின் உடை அகற்றப்படும் நிகழ்வை வேறொரு இடத்தில் இருந்த ஒருவர் அலைபேசி மூலம் பார்க்கும் வகையில் அதற்கான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒக்டோபர் 8 ஆம் திகதி ஞானசார தேரரின் வேண்டுகோளின் பேரில் தான் வெலிக்கடை சிறைக்குச் சென்றதாகவும், அப்போது தனது காவி உடையை அகற்றிவிட்டு சிறைக்கைதிக்குரிய உடையை அணிவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி குறித்து அவர் தன்னிடம் விளக்கினார் என்றும் கம்மன்பில கூறியுள்ளார்.
தொலைபேசி அழைப்பு
2018 ஆம் ஆண்டிலும் இதேபோன்றதொரு சம்பவம் இடம்பெற்றதாகவும், அப்போது ஞானசார தேரர் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து அதிகாரிகள் அந்த முயற்சியைக் கைவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் இம்முறை, சிறைக்கைதிக்குரிய உடையை அவருக்குப் பலவந்தமாக அணிவிக்க அதிகாரிகள் குழுவொன்று முயன்றதாக கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அந்தச் சமயத்தில், வேறொரு இடத்தில் இருந்த ஒருவர் இந்நிகழ்வைப் பார்க்கும் வகையில் சிறை அதிகாரி ஒருவர் தனது அலைபேசி கெமராவை இயக்கியதாக ஞானசார தேரர் தன்னிடம் கூறியதாகவும் கம்மன்பில கூறியுள்ளார்.
இதன் விளைவாக, தேரர் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்த போதிலும், தேசிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட தலைவர்கள் விடுத்த அழுத்தத்தின் காரணமாகவே ஞானசார தேரர் சிறைச்சாலையின் சீருடையை அணிய நேரிட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.