ஞானசாரர் விவகாரத்தில் இலக்கு வைக்கப்படும் சந்தியா எக்னலிகொட
கலகொட அத்தே ஞானசார தேரர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து, சந்தியா எக்னலிகொட இலக்கு வைத்து நடத்தப்படும் வெறுப்புப் பேச்சு, அவமதிப்பு மற்றும் வன்முறையைத் தூண்டும் பிரசாரங்களை இலங்கையின் ஊடக அமைப்புகளின் கூட்டமைப்பு ஒன்று வன்மையாகக் கண்டித்துள்ளது.
இது தொடர்பில் குறித்த அமைப்பு வெளியிட்ட கூட்டறிக்கையில், சந்தியா எக்னலிகொடவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதுடன், நாட்டில் வெறுப்புணர்வை வளர்க்கும் கலாசாரத்தை மேலும் தூண்டக்கூடும் என்றும் அந்த அமைப்புகள் எச்சரித்துள்ளன.
முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
தனது கணவரும் ஊடகவியலாளருமான பிரகீத் எக்னலிகொடவின் காணாமல் போன விவகாரம் தொடர்பாக 16 ஆண்டுகளுக்கும் மேலாக உண்மையும் நீதியும் கோரி வரும் சந்தியா, சட்டரீதியான நீதித்துறை நடைமுறையின் மூலம் எடுக்கப்பட்ட முடிவுகளுக்காக அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளக் கூடாது என்று அந்த அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

பிரகீத் எக்னலிகொட காணாமல் போனமை தொடர்பான வழக்கு விசாரணைகளின் போது நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஞானசார தேரருக்கு, ஒகஸ்ட் 2018இல் ஆறு ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை அவை சுட்டிக்காட்டியுள்ளன.
மே 2019இல் ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் அவர் விடுவிக்கப்பட்ட போதிலும், பின்னர் உயர் நீதிமன்றம் அந்த மன்னிப்பை நிராகரித்ததால் அவர் மீண்டும் சிறைக்குச் செல்ல நேரிட்டது.
இந்நிலையில், இவ்விவகாரத்தில் சந்தியா எக்னலிகொட கொடுக்கப்படும் அழுத்தம் குறித்தும் அவரின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டவும், நிலைமை மேலும் மோசமடைவதைத் தடுக்கவும் உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளை குறித்த அமைப்பு கோரியுள்ளது.
பாக்கியராஜ் சொன்ன வார்த்தை வீட்டைவிட்டு வெளியேறிய மலர்... அழகே அழகு சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
உண்மையாக நேசிக்கும் ரிஷப ராசிக்காரர்களின் மறுபக்கம் தெரியுமா? இவர்களை பிரிந்தால் இழப்பு உங்களுக்குத்தான்! Manithan