உயர்நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு! திடீரென தலைமறைவான ஞானசார தேரர்
பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் தலைமறைவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
பொதுபல சேனா (BBS) அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டின் கீழ் கடந்த 2019-ஆம் ஆண்டில் ஆறுவருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தார்.
ஞானசார தேரர்
அவர் தனது சிறைவாழ்க்கையில் சுமார் ஒன்பது மாதங்களைப் பூர்த்தி செய்திருந்த நிலையில், 2019-ஆம் ஆண்டு மே மாதம் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவால் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டிருந்தது.
சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது முதல் பொதுமன்னிப்பு வழங்கப்படும் காலம் வரை ஞானசார தேரர், வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் காவியுடையில் சாதாரண விளக்கமறியல் கைதி போன்றே சகல வசதிகளுடன் காலம் கழித்திருந்தார்.

அவ்வாறான நிலையில்தான் அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டிருந்தது. அதற்கு எதிராக கடத்திச் செல்லப்பட்டு, காணாமல் போகச் செய்யப்பட்ட பிரபல ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட அடிப்படை மனித உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் குறித்த மனுவிசாரணையின் இறுதியில் உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன வழங்கிய பொது மன்னிப்பு தன்னிச்சையானது என்றும், அது பொது நம்பிக்கையையும் இயற்கை நீதியின் கோட்பாடுகளையும் மீறுவதாகவும் தீர்ப்பளித்தது.
தலைமறைவு
இந்நிலையில் தனக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததைத் தொடர்ந்து ஞானசார தேரர் தலைமறைவாகிவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவரது தண்டனையின் மீதமுள்ள ஆறு ஆண்டுகளை அனுபவிப்பதற்காக அவரை மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகஇ ராஜகிரிய, நாவலவில் உள்ள விகாரைக்கு சிறைச்சாலை அதிகாரிகள் கடந்த சனிக்கிழமை சென்றிருந்தனர்.

எனினும் ஞானசார தேரர் விகாரையில் இருந்து தலைமறைவாகியுள்ளதுடன், அவரது மெய்ப்பாதுகாவலர் உள்ளிட்ட எவருக்கும் அவரது இருப்பிடம் குறித்த தகவல்கள் தெரியவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
தனது தண்டனையில் ஒன்பது மாதங்களை மட்டுமே அனுபவித்திருந்த ஞானசார தேரர், தற்போது தனது அசல் ஆறு ஆண்டு தண்டனையின் பெரும்பகுதியை அனுபவிக்கும் நிலையை எதிர்கொள்கிறார்.
இந்நிலையில் தலைமறைவாக உள்ள அவரைத் தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.