தொழிற்சங்க நடவடிக்கைக்குத் தயாராகும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்
எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட யோசனைகள் ஊடாகத் தமது தொழிற்சார் பிரச்சினைகளுக்கு எவ்விதத் தீர்வும் வழங்கப்படாத காரணத்தினால், நேற்றயை தினம் இந்தப் போராட்டம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
பிரதானமாக ஐந்து கோரிக்கைகளை முன்வைத்தே இந்தத் தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அங்கீகரிக்கப்பட்ட முழுமையான DAT கொடுப்பனவை வழங்குதல். இடைநிறுத்தப்பட்டுள்ள 1/3 மேலதிகக் கடமை மற்றும் விடுமுறை தினக் கொடுப்பனவுகளை உடனடியாக மீள ஸ்தாபித்தல். DAT கொடுப்பனவிற்கு வரி விலக்கு அளித்தல். 22/99 போக்குவரத்து வசதிகளுக்காகத் தகுதி பெற்றுள்ள வைத்தியர்களை உள்வாங்குதல். வரிச் சலுகையுடன் கூடிய வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்களை வழங்குதல் இந்த கோரிக்கைகளின் அடிப்படையில் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
இந்த பிரதான கோரிக்கைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத் தரப்பினரிடமிருந்து சாதகமான தலையீடுகள் இடம்பெறாத பட்சத்தில், அடுத்தகட்ட தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தீர்மானிக்கும் அதிகாரம் சங்கத்தின் நிறைவேற்றுச் சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.
எனவே, வைத்தியர்களின் இந்த நியாயமான யோசனைகள் குறித்துச் சாதகமான பேச்சுவார்த்தையொன்றின் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இக்கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறுவதால் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கைகளினால் நோயாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு ஜனாதிபதி, சுகாதார அமைச்சர் உள்ளிட்ட அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது