4500 ரூபா சமுர்த்தி உதவியை கொடுத்து 6700 ரூபாவை வரியாக பறிக்கும் அரசு
இலங்கையின் சாதாரண குடும்பம் ஒன்றின் வரி சுமையானது 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2022 ஆம் ஆண்டில் 42 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் 4 ஆயிரத்து 500 ரூபாவை சமுர்த்தி உதவியாக பெறும் வறிய குடும்பம் ஒன்று அரசுக்கு வரியாக 6 ஆயிரத்து 700 ரூபாவை செலுத்துவதாகவும் தெரியவந்துள்ளது.
நான்கு பேரை கொண்ட சாதாரண குடும்பம் மாதம் 28000 ரூபாவை வரியாக செலுத்துகிறது
இலங்கையின் சாதாரண குடும்பங்களின் வரி சுமை தொடர்பாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார விஞ்ஞானம் மற்றும் புள்ளிவிபர கற்கை பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் இது தெரியவந்துள்ளது.
இலங்கையில் நான்கு உறுப்பினர்களை கொண்ட சாதாரண குடும்பம் ஒன்று மாதாந்தம் வரியாக 28 ஆயிரம் ரூபாவை அரசுக்கு செலுத்துகிறது என ஆயவில் கண்டறியப்பட்டுள்ளதாக பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.
பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள மறைமுக வரியானது 2021 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை சுமார் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.
அரசாங்கத்தின் புதிய வரித்திருத்தங்கள் காரணமாக சாதாரண குடும்பம் ஒன்று மாதாந்தம் செலுத்தும் வரியானது சுமார் 4 ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளது. தேசிய வறுமை கோட்டின் கீழ் இருக்கும் குடும்பம் ஒன்று இந்த வருடம் ஜூலை மாதம் முதல் 3 ஆயிரத்து 900 ரூபாவை மறைமுக வரியாக அரசுக்கு செலுத்தியுள்ளது.
4500 ரூபா சமுர்த்தியை வழங்கி 2200 ரூபா நிகர இலாபத்தை பெறும் அரசு
இதனடிப்படையில் அந்த குடும்பம் ஒன்று நாள் ஒன்றுக்கு 460 ரூபாவை அரசுக்கு வரியாக செலுத்தியுள்ளது. இலங்கையில் வறுமையில் வாழும் குடும்பங்களில் 10 வீதத்தை எடுத்துக்கொண்டால், ஒரு குடும்பம் மாதாந்தம் அரசுக்கு 6 ஆயிரத்து 700 ரூபாவை மறைமுக வரியாக செலுத்தி வருகிறது.
சமுர்த்தியின் மூலம் அரசிடம் இருந்து 4 ஆயிரத்து 500 ரூபாவை உதவி தொகையாக பெறும் இந்த குடும்பங்களிடம் இருந்து அரசு 2 ஆயிரத்து 200 ரூபாவை நிகர வரி வருமான இலாபத்தை பெறுகிறது.
இந்த வறிய குடும்பங்களிடம் இருந்து அரசாங்கம் மாதாந்தம் பெறும் மறைமுக வரி பணமானது அந்த குடும்பங்களின் வருமானத்தில் 9 வீதம் எனவும் பேராசிரியர் வசந்த அத்துகோரள மேலும் தெரிவித்துள்ளார்.