அரசாங்கத்திடம் சஜித் பிரேமதாச முன்வைத்துள்ள கேள்விகள்
முழு நாடும் இப்போது பேரழிவு நிலையில் உள்ளது. அரசுக்கு எதிரான மக்களின் அழுத்தங்கள் தீவிரமடைந்துள்ளன. ஆனால், இவ்வளவும் நடக்கும்போதும் அரசு மௌனம் காத்து தூங்கிக்கொண்டிருக்கின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டினார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கட்டளை நியதிகள் சட்டம் 27/2 கீழ் அரசிடம் 18 கேள்விகளை முன்வைத்து கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அரசிடம் எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்த 18 கேள்விகளும் வருமாறு,
01. இன்று நாட்டில் வேலையின்மை விகிதம் என்ன?
02. கடந்த 2 ஆண்டுகளில் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் எத்தனை சதவீதம் பேர் வறுமையில் வாடியுள்ளனர்?
03. மார்ச் 2022க்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் (ஜிடிபி) ஒப்பிடும்போது நாட்டின் மொத்த கடன் சுமை (அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் உட்பட) என்ன?
04. 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இது எவ்வளவு தொகை அதிகமாகும்?
05. தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்தவுடன் அதிக வருமானம் ஈட்டுவோருக்கு வரிச்சலுகை வழங்கியதன் மூலம் அரச வருவாய் எவ்வளவால் குறைந்துள்ளது?
06. மேற்கண்ட வரிச்சலுகையால் எத்தனை நேரடி மற்றும் மறைமுக வரி செலுத்துவோர் தொகை (பெருமானம் சேர் வரி) எவ்வளவாக குறைவுக்குட்பட்டுள்ளன?
07. 2019 உடன் ஒப்பிடும்போது கடந்த இரண்டு ஆண்டுகளில் அரச வருவாயுடன் ஒப்பிடும்போது அரச கடன்களுக்கான வட்டி விகிதம் என்ன?
08. இத்தகைய அரச வருவாயுடன் ஒப்பிடும்போது அதிக வட்டி விகிதம் செலுத்தும் வேறு எந்த நாடும் உள்ளதா?
09. ஏப்ரல் 2022 க்குள் அதிகாரபூர்வ பயன்பாடு அல்லது உண்மையான வெளிநாட்டுகே கையிருப்பின் அளவு என்ன?
10. சீன அரசால் பரிவர்த்தனை திட்டத்தின் (SWAP) கீழ் 10 பில்லியன் யுவான் வழங்கும்போது விதிக்கப்பட்ட நிபந்தனைகள் என்ன? அந்த நிபந்தனைகளின் கீழ் இந்த SWAP வசதியைப் பெறுவதற்கான விசேடமான காரணங்கள் என்ன?
11. இந்திய அரசால் இலங்கைக்கு அத்தியாவசிய உணவு மற்றும் மருந்துப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக வழங்கிய ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனில் மீதமுள்ள 750 மில்லியன் அமெரிக்க டொலர்களை இரும்பு, உருக்கு இறக்குமதிக்காகப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளிவந்துள்ளது. அது உண்மையா? அப்படியானால், இந்த இரும்பு இறக்குமதியில் நிவாரணம் பெறுவது இருப்புத் தொழிலில் ஈடுபடும் எந்த நிறுவனங்கள்?
12. சமீப காலமாக தொடர் மின்வெட்டு காரணமாக வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளின் மின் நுகர்வு எந்தளவுக்குக் குறைந்துள்ளது? கடந்த 6 மாதங்களில் மின்வெட்டு காரணமாக பொருளாதாரத்தில் எந்தளவு நட்டம் ஏற்பட்டுள்ளது?
13. சமீப காலத்தில் பாரிய விலை அதிகரிப்பால் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாறியுள்ளதா? இல்லையென்றால், நட்டத்தை எதிர்கொள்ளாது நடத்திச் செல்ல இன்னும் எந்தளவில் எரிபொருளை விலையை அதிகரிக்க வேண்டும்?
14. கடந்த ஆறு மாதங்களில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு ஏற்பட்ட நட்டத்தை ஈடுசெய்வதற்கு எவ்வாறு திட்டமிடப்பட்டுள்ளது?
15. தற்போதைய எரிபொருள் மற்றும் எரிவாயு வரிசைகளை முடிவுக்குக்கொண்டு வந்து, எரிவாயு மற்றும் எரிபொருளை மக்களுக்கு வழக்கம்போல் வழங்குக்கூடிய திகதி என்ன?
16. அரச உர நிறுவனங்களால் இவ்வருட சிறு போகத்துக்காக எவ்வளவு இரசாயன உரங்களை இறக்குமதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது? தற்போது வீழ்ச்சியடைந்துள்ள நெல் விவசாயம் மற்றும் ஏனைய விளைச்சல்களுக்கு அந்த உரத்தை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படும் விலை எவ்வளவு?
17. பண்டோரா பத்திரம் ஊடாக நம் நாட்டிலிருந்து மோசடியாகத் திருடப்பட்ட பணம் எப்போது மீட்கப்படும்? இதற்காக அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?
18. இலங்கையில் மோசடியான மற்றும் ஊழல் அடிப்படையில் திருடப்பட்ட பணத்தை மீண்டும் நாட்டுக்குப் பெற்றுக்கொள்வதற்காக ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபை மற்றும் போதைப்பொருள், குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் (UNODC) மற்றும் உலக வங்கி இணைந்து செயற்படுத்தப்படும் திருடப்பட்ட சொத்துக்களை மீட்கும் திட்டம் (Stolen Asset Recovery Initiative – StAR) ஆகிய சர்வதேச திட்டங்களுக்குச் சென்று தொழில்நுட்ப உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கு அரசு எப்போது தயாராகும்? மேற்படி கேள்விகளை சபையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பினார்.