இந்தியாவில் இருந்து நாடு திரும்ப இலங்கையர்கள் குழு ஒன்றுக்கு சிறப்பு அனுமதி!
இலங்கையைச் சேர்ந்த சிலர் அடங்கிய குழு ஒன்றுக்கு இந்தியாவிலிருந்து திரும்புவதற்கு சிறப்பு ஒப்புதல் வழங்ப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
இன்று புதுடில்லியில் இருந்து வந்த சிறப்பு விமானம் ஒன்றில் சுமார் 20 இலங்கையர்கள் இருந்ததாக சுகாதார அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
சுகாதார அமைச்சின் செய்தி தொடர்பாளர் ஒருவர் இதனை தெரிவித்திருப்பதாக கொழும்பு ஆங்கில செய்தித்தாள் ஒன்று தெரிவித்திருக்கிறது.
இந்த இலங்கையர்கள் ஏற்கனவே மருத்துவ சிகிச்சை மற்றும் ஏனைய அவசர தேவைகளுக்காக புது டில்லியில் தங்கியிருந்த போது கோவிட் காரணமாக அவர்களின் போக்குவரத்து தடைப்பட்டது.
இந்த நிலையில் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானியரக அதிகாரிகள் குழுவுடன் இன்று வந்த எயார் இந்தியா விமானத்தில் இந்த இலங்கையர்களும் அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இதனையடுத்து அவர்கள் 14 நாள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளதாக இலங்கையின் சுகாதார அமைச்சு தெரிவித்திருக்கிறது.
இதேவேளை இந்தியாவில் தொடர்ந்தும் கோவிட் பரவல் தீவிரமாகி வந்த நிலையில் கடந்த மே 6 ஆம் திகதி முதல் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு பயணிகள் வருவது தடை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.