அமெரிக்கா - ஈரான் இடையே மீண்டும் போர் பதற்றம்
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே இரண்டு வாரங்களுக்கு முன்பு கையெழுத்தான தற்காலிக அமைதி ஒப்பந்தத்தை மீறி, இரு தரப்பும் பரஸ்பரம் தாக்குதல்களை நடத்தத் தொடங்கியுள்ளதால் வளைகுடா பகுதியில் மீண்டும் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
உலகிலேயே மிக முக்கியமான எரிசக்தி கப்பல் போக்குவரத்துப் பாதையான ஹோர்முஸ் நீரிணையில் சனிக்கிழமையன்று பயணித்த எண்ணெய் ஏற்றிச் செல்லும் பிரம்மாண்ட கப்பல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தற்காப்பு தாக்குதலை நடத்தி
அமெரிக்கப் படைகள் ஈரானின் சிரிக் துறைமுக நகரிலுள்ள தகவல் தொடர்பு கோபுரத்தை இரவோடு இரவாகத் தாக்கியதற்குப் பதிலடியாகவே, தாங்கள் அமெரிக்காவுடன் தொடர்புடைய இராணுவ இலக்குகள் மற்றும் கப்பல்கள் மீது இந்த 'தற்காப்பு' தாக்குதலை நடத்தியதாக ஈரான் அறிவித்துள்ளது.

அதேநேரத்தில், அமெரிக்காவின் கடற்படைத் தலைமையகம் அமைந்துள்ள பஹ்ரைன் நாட்டின் மீதும் ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த அத்துமீறல்களுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், அமெரிக்கா போர்நிறுத்த ஒப்பந்தத்தை முறையாகப் பின்பற்றி வருவதாகவும், ஈரானின் இத்தகைய வன்முறைச் செயல்களுக்கு தகுந்த வன்முறை மூலமே பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
வளைகுடா போரினால் முடங்கிக் கிடந்த சர்வதேச மசகு எண்ணெய் விநியோகம் கடந்த இரண்டு வாரங்களாகவே சீராகத் தொடங்கியிருந்த நிலையில், இந்த புதிய மோதல் உலகளாவிய எரிசக்தி சந்தையில் மீண்டும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.