சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை: அவுஸ்திரேலிய அரசின் அதிரடி அறிவிப்பு
சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்தத் தவறும் பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் அதிகபட்ச அபராதத் தொகையை இரட்டிப்பாக்க உள்ளதாக அவுஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடைச் சட்டம் நடைமுறைக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகியும், அது பதின்ம வயதினரிடையே பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்ற ஆதாரங்கள் வெளியானதைத் தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகத் தடை
இந்த புதிய சட்டத் திருத்தத்தின்படி, முறையான வயதுக் கட்டுப்பாட்டு விதிகளைப் பின்பற்றாத நிறுவனங்களுக்கான அதிகபட்ச அபராதத் தொகை 49.5 மில்லியன் அவுஸ்திரேலிய டொலரிலிருந்து 99 மில்லியன் அவுஸ்திரேலிய டொலராக (சுமார் 68 மில்லியன் அமெரிக்க டொலர்) உயர்த்தப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானிஸ் இதுகுறித்துக் கூறுகையில், "சமூக ஊடகங்களுக்கான குறைந்தபட்ச வயது வரம்பைக் கொண்டு வந்த பிறகு உலகளவில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ள போதிலும், பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் சட்டத்தை மதிக்கப் போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பதும், இன்னும் ஏராளமான சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி வருவதும் தெளிவாகத் தெரிகிறது" என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.
இந்தத் தடையின் காரணமாக இதுவரை 5 மில்லியனுக்கும் அதிகமான சிறுவர்களின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டாலும், 'பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல்' (BMJ) இந்த வாரம் வெளியிட்ட ஆய்வு முடிவில், 12 முதல் 15 வயதுடைய அவுஸ்திரேலிய சிறுவர்களில் 85% பேர் இன்னமும் போலி வயதுகளைக் குறிப்பிட்டோ அல்லது செல்ஃபி சரிபார்ப்பு முறைகளை ஏமாற்றியோ சமூக ஊடகங்களைத் தொடர்ந்து பயன்படுத்தி வருவது அம்பலமாகியுள்ளது.
அபராதத் தொகை
தற்போது கொண்டு வரப்படவுள்ள புதிய சட்ட மாற்றங்கள் மூலம், அவுஸ்திரேலியாவின் இணையப் பாதுகாப்பு ஆணையர், மெட்டாவின் இன்ஸ்டாகிராம், பேஸ்புக், கூகுளின் யூடியூப், ஸ்னாப்சாட் மற்றும் டிக்டாக் ஆகிய 5 முக்கிய தளங்கள் சிறுவர்களைத் தடுக்க என்னென்ன உத்திகளைக் கையாண்டுள்ளன என்ற ஆதாரங்களைக் கட்டாயமாகப் பெற்று விசாரணை நடத்தும் அதிகாரத்தைப் பெறுகிறார்.

அதேவேளையில், இந்தத் தடைச் சட்டமானது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது எனக் கூறி 'ரெடிட்' நிறுவனம் அவுஸ்திரேலிய உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ள நிலையில், நீதிமன்றத்தில் அதனைத் தீவிரமாக எதிர்கொள்ளப் போவதாக அவுஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.
ருவன்வெலிசாய சூடாமணிக்கல்லில் 1,500 கோடி ரூபா இரத்தினக்கல் கொள்ளை: கோட்டாபயவிற்கு எதிராகச் சி.ஐ.டியில் முறைப்பாடு
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
பிரித்தானியாவில் ஒரு அதிர்ஷ்டசாலி: யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் £111 மில்லியன் வென்று சாதனை News Lankasri