இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள புவிசார் அரசியல் போட்டி
மலையக தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளைத் தவிர்த்து இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்கு அனுப்பவுள்ள பொது ஆவணத்தில் தமிழ்த்தேசியக் கட்சிகள் வியாழக்கிழமை கைச்சாத்திட்டுள்ளன.
அதேநேரம், தமிழ் பேசும் மக்களின் தாயகமான கிழக்கு மாகாணம் திருகோணமலையில் உள்ள எண்ணெய்க் குதங்கள் இந்தியாவிடம் கையளிப்பதற்கான ஒப்பந்தமும் வியாழக்கிழமை மாலை கொழும்பில் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
திருகோணமலையில் தற்போது லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் 14 எண்ணெயக் குதங்கள் மேலும் 50 வருடங்களுக்கு அதே இந்திய நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தத்தின் மூலம் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை ஒற்றையாட்சி அரசின் திறைசேரிச் செயலாளர் மற்றும் காணி ஆணையாளர் நாயகம் ஆகியோர் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் ஒப்பந்தத்தில் கைச்சாட்டுள்ளனர். இதனை அமைச்சர் உதயகம்மன்பில கொழும்பில் உள்ள ஊடங்களுக்கு உறுதிப்படுத்தினார்.
அதேவேளை, பிரதமர் நரேந்திரமோடிக்கு அனுப்பவுள்ள பொது ஆவணத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் முன்னாள் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன், ஈபி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், ரெலோ இயக்கத் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் மக்கள் கட்சித் தலைவர் என்.சிறிகாந்தா ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளனர்.
தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா நாளை வெள்ளிக்கிழமை கைச்சாத்திடுவாரெனக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோருடன் சம்மந்தன் தொலைபேசியில் உரையாடியிருந்தார்.
மலையகத் தமிழர்கள், முஸ்லிம்கள் ஆகியோரின் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு பொது ஆவணத்தில் கைச்சாத்திடுவதாகச் சம்பந்தன் தொலைபேசியில் எடுத்துரைத்ததார் என்று கட்சித் தகவல்கள் கூறுகின்றன.
13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தி நரேந்திரமோடிக்குக் கடிதம் அனுப்புவதற்காக யாழ்ப்பாணம் திண்ணை ஹோட்டேலில் கடந்த நவம்பர் மாதம் இரண்டாம் திகதியும், கொழும்பு குளோபல் டரவர் ஹோட்டேலில் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதியும் இரண்டு கூட்டங்கள் நடைபெற்றுத் தயாரிக்கப்பட்ட ஆவணம் தொடர்பாக மேலும் பரிசீலிப்பதற்காக டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி கொழும்பில் மூன்றாவது கூட்டமும் நடைபெற்றிருந்தது.
அந்தக் கூட்டத்தில சம்பந்தனுடன் பங்குபற்றியிருந்த தமிழரசுக் கட்சிப் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், ஆவணத்தின் பெயரில் மாற்றம் செய்திருந்தார். தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளும் இந்திய இலங்கை ஒப்பந்தமும் எனப் பெயர் மாற்றப்பட்டிருந்தது.
1985 ஆம் ஆண்டு விடுதலை இயக்கங்கள் அனைத்தும் இந்தியாவின் ஏற்பாட்டில் இணங்கிக் கொண்ட திம்புக் கோட்பாட்டின் அடிப்படைகளை முன்னிலைப்படுத்திப் பொது ஆவணத்தைத் தயாரித்திருக்கலாம்.
மலையகத் தமிழர்கள் பற்றிய விடயங்களும் அதில் உண்டு இது தொடர்பாக கடந்த முதலாம் திகதி சனிக்கிழமை கொழும்பில் சுமந்திரனின் இல்லத்தில் நடந்த கூட்டத்தில் தமிழரசுக் கட்சி ஆராய்ந்தபோது, பெரும் சர்ச்சை ஏற்பட்டிருந்தது.
22 ஆம் திகதி டிசம்பர் மாதம் தயாரிக்கப்பட்ட ஆவணத்தில், 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தல் மற்றும் சமஸ்டி ஆட்சி உள்ளடங்கிய விடயங்கள் அனைத்தும் கைவிடப்பட்டு வெறுமனே மாகாண சபைத் தேர்தலை மாத்திரம் நடத்துவதற்கான ஆவணமாகத் தயாரிக்கப்பட்டிருந்தால் தமிழரசுக் கட்சிக்குள் வாக்குவாதம் ஏற்பட்டிருந்தது.
நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கடும் எதிர்ப்பு வெளியிட்டதுடன் இந்திய- இலங்கை ஒப்பந்தத்திற்கும் அப்பாற்பட்டே சம்ஸ்டி ஆட்சி முறையைக் கோர வேண்டுமெனவும் யாழ்பாணத்தில் இரண்டாம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கோரியிருந்தார்.
இந்த நிலையில் 22 ஆம் திகதி தயாரிக்கப்பட்ட ஆவணத்திலேயே அனைத்துக் கட்சித் தலைவர்களும் கைச்சாத்திட்டுள்ளனர். ஆனால் இந்த ஆவணத்தில் தமிழரசுக் கட்சி கைச்சாத்திட சிறிதரன் சம்மதித்தாரா இல்லையா என்று உறுதிப்படுத்த முடியவில்லை.
தமிழ்த்தேசியக் கட்சிகள் மேற்படி பொது ஆவணத்த்தில் கைச்சாத்திட்டிருந்த இன்றைய நாளிலேயே திருகோணமலை எண்ணெய்க் குதங்களை இந்தியாவுக்குக் கையளிக்கும் ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டிருக்கின்றது.
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் இந்தியப் பாதுகாப்பே முக்கியமானது. அது தொடர்பாக இந்தியப் பிரதமரும் இலங்கை ஜனாதிபதியும் 1987 ஆம் ஆண்டு கைச்சாத்திட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து பரிமாறப்பட்ட கடிதங்களில் தமிழ் பேசும் மக்களின் தாயகத்திலுள்ள திருகோணமலையின் இரண்டாம் உலகப் போர்க்கால எண்ணெய்க் குதங்களை இந்தியாவிடம் கையளிப்பது என்ற விடயமும் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது.
2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் அதுவும் பன்னிரெண்டு ஆண்டுகள் சென்றுவிட்டதொரு நிலையில் இந்தோ-பசுபிக் பிராந்தியப் பாதுகாப்பை மையமாகக் கொண்டு திருகோணமலையில் உள்ள எண்ணெய்க்குதங்களை இந்தியாவுக்கு வழங்க இலங்கை தற்போது இணங்கியுள்ளதாக இந்திய ஊடகங்களில் கடந்தவாரம் செய்திகள் வெளியாகியிருந்தன.
திருகோணமலையில் தற்போது லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் 14 எண்ணெய்க் குதங்கள் மேலும் 50 வருடங்களுக்கு அதே இந்திய நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கப்படுமென இலங்கை ஒற்றையாட்சி அரசின் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவும் கூறியிருந்தார்.
இந்நிலையில், மீதமுள்ள 61 எண்ணெய் குதங்கள் திருகோணமலை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் கூட்டாக நிர்வகிக்கப்படும் என்றும் அவற்றில் CPC 51% பங்குகளையும், LIOC 49% பங்குகளையும் கொண்டிருக்கும் என்றும் அமைச்சர் உயதகம்மன்பில தொிவித்திருந்தார்.
ஆகவே இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் மீண்டும் அமெரிக்க-இந்திய அரசுகள் தமக்குரிய புவிசார் அரசியல் நலன்களைத் தக்க வைத்துள்ளன என்பதையே இன்று தமிழ்த்தேசியக் கட்சிகள் கைச்சாத்திட்ட பொது ஆவணமும், திருகோணலை எண்ணெய்க் குதங்களை இந்தியாவுக்கு வழங்குவதற்காகச் செய்யப்பட்ட ஒப்பந்தமும் வெளிப்படுத்துகின்றன.
இதற்காகவே ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலைக்கான நிரந்தர அரசியல் தீர்வு என்பதை இலங்கை ஒற்றையாட்சியின் கீழ் முடக்குவதற்கான உத்திகளாக ரெலோ தலைமையிலான அணியும் சுமந்திரன் தலைமயிலான அணியும் கிட்டத்தட்ட ஒரே புள்ளிக்குச் சமாந்திரமான முறையில் ஆனால் வெவ்வேறாகப் பிரித்துக் கையாளப்படடிருக்கலாம் என்ற சந்தேங்களும் எழுகின்றன.
ஈழத்தமிழர்களின் தேசம், சுயநிர்ணய உரிமை ஆகிய பிரதான அம்சங்கள் முற்றாகவே நீக்கம் செய்யப்படக்கூடியதொரு முறையில், இலங்கை ஒற்றையாட்சி அரசுக்குள் 'அர்த்தமுள்ள அதிகாரப் பரவலாக்கம்' என்ற பெயரில் அமெரிக்கா மற்றும் இந்தியாவுடன் இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஆட்சியாளர்கள் ஏலவே ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாடென்றும் இதனைச் சொல்ல முடியும்.
அதாவது பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், முன்னாள் அமைச்சரும் தற்போதைய இலங்கைக்கான அமைச்சர் அந்தஸ்துள்ள இந்தியாவுக்கான தூதுவருமான மிலிந்த மொராகொட போன்றோர் மறைமுகமாக இணங்கியிருப்பதாகக் கருதப்படும் ஒற்றையாட்சி இலங்கை அரசின் வெளியுறவு இராஜதந்திரம் வெற்றியளித்துள்ளதா என்ற கேள்விகளே இன்று விஞ்சிக் காணப்படுகின்றன.
இதற்குத் தமிழ்த் தேசியக் கட்சிகள் பலியாகிவிட்டன என்ற உணர்வுகளும் மேலெழுகின்றன. ஆகக் குறைந்த பட்ச்சமாக 1985 ஆம் ஆண்டு விடுதலை இயக்கங்கள் அனைத்தும் இணங்கிக் கொண்ட திம்புக் கோட்பாட்டின் அடிப்படைகளை முன்னிலைப்படுத்திப் பொது ஆவணத்தைத் தயாரித்திருக்கலாம் என்ற கருத்தும் உண்டு.
மலையகத் தமிழர்கள் பற்றிய விடயங்களும் திம்புக் கோட்பாட்டில் உண்டு. இந்தச் சந்தர்ப்பத்தைத் தமிழ்த் தேசியக் கட்சிகள் தவறவிட்டுள்ளன.
இதன் பின்னணியில் தற்போது இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள புவிசார் அரசியல் போட்டியை இலங்கை ஒற்றையாட்சி அரசு கனகச்சிதமாகப் பயன்படுத்தியுள்ளது என்றும், இதன் மூலம் இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளுக்குத் தீர்வு ஏற்படுமெனவும் அவதானிகள் கூறுகின்றனர்.
இதேவேளை, தமிழ்த்தேசியக் கட்சிகள் கைச்சாத்திட்ட பொது ஆவணம் மோடிக்கு எப்போது அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்படவில்லை. ஆனால் எதிர்வரும் சனிக்கிழமை அனுப்பிவைக்கப்படலாமென தமிழரசுக்கட்சித் தகவல்கள் கூறுகின்றன.
-மூத்த பத்திரிகையாளரும், அரசியல் விஞ்ஞான விரிவுரையாளருமான அமிர்தநாயகம் நிக்ஸன் -

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam
