ஆபத்தான முறையில் பேருந்தை செலுத்திய சாரதி - இளம் காதலர்களுக்கு நேர்ந்த விபரீதம்
சிலாபம் - கொழும்பு பிரதான வீதியில் மாரவில-முடுக்கட்டுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், யுவதியொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் (18) நீர்கொழும்பிலிருந்து மாரவில நோக்கிச்சென்று கொண்டிருந்த தனியார் பயணிகள் பேருந்து மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
போதைப்பொருள் பயன்படுத்திய பேருந்து சாரதி
தனியார் பேருந்து சாரதி போதைப்பொருளை பயன்படுத்தி பின்னர் போக்குவரத்து விதிகளை மீறி ஆபத்தான முறையில் பேருந்தை செலுத்தி மற்றொரு வாகனத்தை முந்திச்செல்ல முயன்றபோது, எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தினையடுத்து சிலாபம் பகுதியை சேர்ந்த பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொச்சிக்கடை -தலுவகொட்டுவ பகுதியை சேர்ந்த துலரா தனஞ்சய சில்வா (24) என்ற இளைஞர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதுடன், நீர்கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த 20 வயது யுவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளம் பெண்ணின் காதலன் என்றும், இருவரும் தேவாலயத்திற்கு செல்வதற்காக வீட்டிலிருந்து சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.