பாகிஸ்தானில் அதிகரிக்கும் பதற்றம்: இம்ரான் கானின் ஆதரவு வேட்பாளர் சுட்டுக்கொலை
பாகிஸ்தானில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
மர்ம நபர்களால் இவர் நேற்றைய தினம் (31.1.2024) சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் பெப்ரவரி 8ஆம் திகதி பொது தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இவருக்கு முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சி ஆதரவு வழங்கப்பட்டு இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் உள்ள பஜார் என்ற பழங்குடியின மாவட்டத்தில் சுயேட்சை வேட்பாளரான ரெஹான் ஜெப் கான் என்பவரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். மேலும், அவருடன் இருந்த 4 உதவியாளர்களும் சுடப்பட்டுள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த நிலையில், ஜெப் கான் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவருடைய உதவியாளர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஊழல் வழக்கு ஒன்றில், இம்ரான் கான் மற்றும் அவருடைய மனைவி பூஷ்ரா ஆகியோருக்கு, 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |