காசா மறுசீரமைப்பு : அமைதி சபை நிதியின்றி வெறிச்சோடியதாக அறிக்கை!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் உருவாக்கப்பட்ட 'அமைதி சபையின்' அதிகாரப்பூர்வ நிதியகத்தில், உறுப்பு நாடுகள் பல பில்லியன் டொலர்களை வழங்குவதாக உறுதியளித்திருந்த போதிலும், தற்போது "பூஜ்ஜியம்" தொகையே உள்ளதாக பைனான்சியல் டைம்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
பாலஸ்தீனப் பகுதியான காசாவில் இஸ்ரேல் நடத்திய போருக்குப் பிறகு, பேரழிவைச் சந்தித்த காசாவை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த அமைதி சபையை முதன்முதலில் உருவாக்கியுள்ளார்.
பைனான்சியல் டைம்ஸ் வெளியிட்ட செய்தி
கடந்த ஜனவரி மாதம் அமைக்கப்பட்ட இந்த நிதியத்தை உலக வங்கி நிர்வகித்து வருகிறது மற்றும் ஐக்கிய நாடுகள் சபையும் (UN) இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இருப்பினும், இந்த விவகாரம் குறித்து நன்கு அறிந்த நான்கு அநாமதேய ஆதாரங்களை மேற்கோள் காட்டி பைனான்சியல் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், "இதுவரை நன்கொடையாளர்களிடமிருந்து இந்த நிதியத்திற்கு ஒரு டொலர் கூட வந்து சேரவில்லை, பூஜ்ஜியம் டொலர்களே டெபாசிட் செய்யப்பட்டுள்ளன" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐநா வெளியிட்ட கூட்டு மதிப்பீட்டின்படி, போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள காசாவை அடுத்த பத்தாண்டுகளில் மறுசீரமைப்பு செய்ய 71 பில்லியன் டொலருக்கும் அதிகமான நிதி தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அமைதி சபையின் புறக்கணிப்பு
இவ்வளவு பெரிய நிதி தேவை இருக்கும் சூழலில், ட்ரம்பின் இந்த சபைக்கு நிதி எதுவும் வராதது பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

ட்ரம்ப் இந்த சபையை அமைத்தபோது, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மற்றும் மத்திய கிழக்கு இராஜதந்திரங்களுடன் எந்தத் தொடர்பும் இல்லாத பல தூரத்து நாடுகளுக்கும் பரந்த அளவிலான அழைப்புகளை அனுப்பியது. அப்போதே பலரது புருவங்களை உயர்த்த செய்தது.
தற்போது, ட்ரம்பின் கருத்தியல் கூட்டாளிகள் மற்றும் அமெரிக்க ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கத் துடிக்கும் சிறிய நாடுகளை மட்டுமே கொண்டு இந்த சபை உருவாக்கப்பட்டுள்ளதால், ஐரோப்பாவின் முக்கிய பெரிய நாடுகள் இந்த அமைதி சபையை புறக்கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.