அம்பாறையில் இடம்பெற்ற கோர விபத்து! 2 பேர் உயிரிழப்பு - மகளும் தாயும் படுகாயம்
அம்பாறை - புத்தங்கல நான்கு வழி சந்தி பகுதியில் இடம்பெற்ற டிப்பர் வாகனம் மற்றும் முச்சக்கர வண்டி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலை சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று (26) இரவு சுமார் 8.30 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதி
அத்துடன் அதில் பயணம் செய்த மூன்று பேரில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் ஒரு பெண்ணும் ஒரு குழந்தையும் உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
டிப்பர் வாகனம் புத்தங்கல பகுதியில் இருந்து பிலிமகல நோக்கி சென்று கொண்டிருந்ததுடன், முச்சக்கர வண்டி பண்டாரநாயக்க பாலிகா வித்தியாலயப் பகுதியிலிருந்து அம்பாறை பொது வைத்தியசாலைக்கு சென்று கொண்டிருந்ததாக விபத்தினை நேரில் கண்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் விபத்தின் போது டிப்பர் வாகன சாரதி விதியை மீறியதால் பிரதான சாலையில் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி டிப்பர் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தை தொடர்ந்து டிப்பர் வாகன சாரதி வாகனத்தை நிறுத்தாமல் தொடர்ந்து சென்று வாகனத்துடன் அம்பாறை தலைமையக பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆரம்ப கட்ட விசாரணை
மேலும் முச்சக்கர வண்டி சாரதியான கிருஷாந் சனக என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இவர் அம்பாறை நவகம்புர பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
அத்துடன் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இரவு சுமார் 10.30 மணியளவில் துலஞ்சனா இமேஷ் என்பவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் உயிரிழந்தவரின் மனைவி மற்றும் மூன்று வயது மகள் அம்பாறை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்தின் போது டிப்பர் வாகன சாரதி மதுபோதையில் இருந்தது தற்போதைய விசாரணையில் தெரியவந்துள்ளதாக அம்பாறை மாவட்ட தலைமையக பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி எமது செய்தியாளரிடம் தெரிவித்தார்.
சாரதியின் கவனக்குறைவினால் விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன், சாரதி மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் விபத்து குறித்து பொலிஸ் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.