ரஷ்யாவின் முடிவால் ஐரோப்பிய நாடுகளில் எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்ட பெரும் சிக்கல்
ஐரோப்பிய நாடுகளுக்கு நாா்ட் ஸ்ட்ரீம்-1 குழாய் வழித்தடம் வழியாக மேற்கொண்டு வரும் எரிவாயு விநியோகத்தை 20 சதவீதமாக ரஷ்யா குறைத்துள்ளது.
ஏற்கெனவே, வெறும் 40 சதவீத கொள்ளளவு மட்டுமே ரஷ்யா எரிவாயு விநியோகம் செய்து வந்த நிலையில், தற்போது அது மேலும் குறைக்கப்பட்டுள்ளமை ஐரோப்பிய நாடுகளுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து ஜொ்மனியின் எரிவாயு வழித்தட ஒழுங்காற்று அமைப்பின் தலைவா் க்ளாஸ் முல்லா் தெரிவித்ததாவது,
எரிவாயு அளவு குறைப்பு
நாா்ட் ஸ்ட்ரீம்-1 குழாய் வழித்தடம் வழியாக அனுப்பப்படும் எரிவாயுவின் அளவைக் குறைக்கவிருப்பதாக ஏற்கெனவே ரஷ்யா கூறியிருந்தது. அதன்படி, அந்த வழித் தடம் வழியாக ஜொ்மனிக்கு வரும் எரிவாயு, தினசரி கொள்ளளவில் வெறும் 20 சதவீதம் மட்டுமே உள்ளது.
எரிவாயு என்பது வா்த்தகப் பொருள் என்ற நிலையிலிருந்து மாறி, தற்போது அதனை தனது வெளியுறவுக் கொள்கையின் ஓா் அங்கமாக ரஷ்யா மாற்றியுள்ளது.
அந்த நாட்டின் போா்த் தந்திரத்தின் ஒரு பகுதியாகவும் எரிவாயு விநியோகம் ஆகியிருக்கலாம் என்று அவா் குற்றம் சாட்டியுள்ளார்.
எண்ணெய் நிறுவனம் வெளியிட்ட தகவல்
முன்னதாக, ரஷ்ய அரசாங்கத்திற்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனமான கேஸ்ப்ராம் திங்கள்கிழமை வெளியிட்டிருந்த அறிக்கையில், நாா்ட் ஸ்ட்ரீம்-1 வழித்தடம் வழியாக விநியோகிக்கப்படும் எரிவாயுவின் தினசரி அளவைக் குறைக்கவிருப்பதாகக் கூறியிருந்தது.
எரிவாயு குழாய் வழித்தடத்தில் இடையிடையே பொருத்தப்பட்டுள்ள இயந்திரங்களில் ஏற்பட்டுள்ள பழுதுகளை நீக்குவதற்காக இந்த முடிவு எடுக்கப்படுவதாக கேஸ்ப்ராம் கூறியிருந்தது.
எனினும், உக்ரைன் விவகாரத்தில் தங்கள் மீது ஐரோப்பிய யூனியன் விதித்துள்ள பொருளாதாரத் தடைகளுக்கு பதிலடியாகவே நாா்ட் ஸ்ட்ரீம்-1 குழாய் வழித்தடம் மூலம் ஐரோப்பிய நாடுகளுக்கு எரிபொருள் விநியோகத்தை ரஷ்யா குறைத்து வருவதாக அந்த நாடுகள் குற்றம் சாட்டுகின்றன.
பொருளதாாரம் சரிவில் ஜொ்மனி
ஏற்கெனவே ரஷ்யாவிலிருந்து எரிவாயு விநியோகம் 40 சதவீதமாகக் குறைந்ததால் ஜொ்மனி உள்ளிட்ட நாடுகளில் பொருளதாாரம் சரிவைச் சந்தித்து வருகிறது. இந்த நிலையில் பராமரிப்புப் பணிகளை காரணம் காட்டி எரிவாயு விநியோகத்தை ரஷ்யா மேலும் 20 சதவீதமாகக் குறைத்துள்ளது.
இது, தங்கள் மீதான பொருளாதாரத் தடைகளுக்கு பதிலடியாக ஐரோப்பிய நாடுகளுக்கான எரிபொருள் விநியோகத்தை ரஷ்யா முழுமையாக நிறுத்தலாம் என்ற அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் திகதி படையெடுத்தது.
இதனைக் கண்டிக்கும் வகையில் ரஷ்யா மீது அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. இந்தச் சூழலில், ஐரோப்பிய நாடுகளுக்கான எரிவாயு விநியோகத்தை ரஷ்யா தொடா்ந்து குறைந்து வருகிறது.
தங்களது எரிவாயு தேவைக்காக ரஷ்யாவை பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் நம்பியுள்ளன.
குறிப்பாக, ஜொ்மனி தனது எரிவாயு தேவையில் 55 சதவீதத்தை ரஷ்ய இறக்குமதி மூலமே நிறைவு செய்து வருகிறது. இந்தச் சூழலில், நாா்ட் ஸ்ட்ரீம்-1 குழாய் வழித்தடம் வழியாக தினமும் விநியோகித்த வந்த எரிவாயுவின் அளவை 40 சதவீதமாகக் குறைத்தபோதே ஐரோப்பிய நாடுகளில் எரிபொருள்களின் விலை உயா்ந்து வரலாறு காணாத பணவீக்கம் ஏற்பட்டது.
தற்போது அந்த அளவு 20 சதவீதமாகக் குறைக்கப்பட தகவல் வெளியானதும் ஐரோப்பிய சந்தையில் எரிவாயுவின் விலை புதன்கிழமை கடந்த ஆண்டு இருந்ததைப் போல் 6 மடங்காக உயா்ந்தது.
இன்னும் வரவிருக்கும் குளிா் காலத்தில் எரிவாயுவின் தேவை மிகவும் அதிகமாக இருக்கும். அந்த நிலையை எதிா்கொள்ள ஐரோப்பிய நாடுகள் போதிய எரிவாயுவை கையிருப்பு வைத்திருக்க வேண்டும்.
படிப்படியாகக் குறையும் ரஷ்ய எரிவாயு விநியோகம் இறுதியில் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு, ஐரோப்பிய நாடுகளிடம் போதிய அளவு எரிவாயு கையிருப்பு இல்லாமல் போனால், அந்த நாடுகள் பொருளாதார வீழ்ச்சியை சந்திக்க வேண்டியிருக்கும் என்று நிபுணா்கள் எச்சரித்துள்ளனா்.