லாஃப் சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பில் நுகர்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி
சமையல் எரிவாயுவை பல மாதங்களாக சந்தைக்கு விநியோகிப்பதை நிறுத்தி இருந்த லாஃப் எரிவாயு நிறுவனம் இறக்குமதி செய்துள்ள எரிவாயுவை ஏற்றிய கப்பல் நாளைய தினம் இலங்கையை வந்தடைய உள்ளது என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
3000 மெற்றி தொன்
இந்த கப்பலில் சுமார் 3 ஆயிரம் மெற்றி தொன் எரிவாயு கொண்டு வரப்படுகிறது. கப்பல் வந்தடைந்த பின்னர் அடுத்த சில தினங்களில் மீண்டும் சந்தைக்கு எரிவாயு விநியோகிக்கப்படவுள்ளது.
இலங்கையில் சமையல் எரிவாயுவை பயன்படுத்துவோரில் கணிசமான தொகையினர் லாஃப் எரிவாயுவையே பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிறுவனம் சந்தைக்கு சமையல் எரிவாயுவை விநியோகிக்காத காரணத்தினால், நுகர்வோர் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர்.
நாடு எதிர்நோக்கியுள்ள டொலர் தட்டுப்பாடு தொடர்பான பிரச்சினை காரணமாக சமையல் எரிவாயுவை விநியோகிக்க முடியாது போயுள்ளது என லாஃப் எரிவாயு நிறுவனம் தெரிவித்திருந்தது.