சமையல் எரிவாயு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் (Photos)
நோர்வூட் - புளியாவத்தை கடைவீதியில் வசிக்கும் மக்கள் தங்களுக்குக் கூடிய விரைவில் சமையல் எரிவாயுவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் குதித்துள்ளனர்.
ஹட்டன் - சாஞ்சிமலை பிரதான வீதியை மறித்து, வீதி நடுவே 'வெற்று' சமையல் எரிவாயு கொள்கலன்களை அடுக்கி வைத்து, பதாகைகளை தாங்கியும், கோஷங்களை எழுப்பியும் மக்கள் இன்று தமது போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
வீதியை மறித்து போராட்டம்
இதனால் அவ்வீதி ஊடான போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதமடைந்திருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
ஹட்டனிலிருந்து சாஞ்சிமலை, பொகவந்தலாவை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்வதற்கு வந்த மக்கள் நீண்ட நேரம் வாகனங்களில் காத்திருந்தனர்.
பலர் மாற்று வழிகளை தேடித் திரும்பிச் சென்றுள்ளதுடன் அப்பகுதிகளில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது போராட்டகாரர்கள் தெரிவிக்கையில், எங்களுக்குக் கடந்த ஐந்து மாதங்களாக சமையல் எரிவாயு விநியோகிக்கப்படவில்லை. மண்ணெண்ணெய்யும் பகிரப்படவில்லை.
நகரப்பகுதி என்பதால் விறகடுப்பு பயன்படுத்துவதிலும் ஆயிரம் தடைகள்.
இந்நகரில் லிற்றோ சமையல் எரிவாயு முகவர்கள் மூவர் இருக்கின்றனர். அவர்களுக்குக் குறித்த நிறுவனத்தால் எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்படவில்லை.
போராட்ட பகுதியில் பொலிஸார்
இதனால் நாம் எல்லா வழிகளிலும் துன்பப்படுகின்றோம். எனவே, சமையல் எரிவாயுவை விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
அத்துடன், எரிவாயு வழங்குவதற்கான கூப்பன் தமக்கு வழங்கப்படாமைக்கும் எதிர்ப்பை அவர்கள் பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் எதிர்வரும் 8ஆம் திகதிக்குப் பின்னர் சமையல் எரிவாயுவைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் உறுதியளித்துள்ளனர்.
இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டதுடன், போக்குவரத்து நடவடிக்கையும் வழமைக்குத் திரும்பியுள்ளது.