நந்திக்கடல் நீரேந்து பகுதிகளில் கொட்டப்படும் குப்பைகள் : முரணாகும் மாவட்டச் செயலகத்தின் செயற்பாடுகள்
முல்லைத்தீவு நந்திக்கடலின் நீரேந்து பகுதிகளில் குப்பைகளை கொட்டிவிடும் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கத் தவறும் போது ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து பலராலும் குப்பைகளை கொட்டிவிட்டுச் செல்லும் நிலை ஏற்படும்.
இதனால் நந்திக்கடலின் இப்பகுதிகள் பாரியளவிலான மாசடைதலைச் சந்திக்கும் என சுற்றுச் சூழல் தன்னார்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
வனஜுவராசிகள் திணைக்களத்தினால் பாதுகாக்கப்பட்ட பிரதேசம் என அடையாளப்படுத்தப்பட்டுள்ள போதும் இயற்கை அமைப்புக்கு பாதமாக அமையும் இச்செயற்பாடு தொடர்பில் அவர்கள் கவனம் எடுக்கவில்லை.
இந்நிலையில், வடக்கில் கழிவு முகாமைத்துவம் தோல்வியடைந்த ஒன்றாகவே தொடர்ந்து நீடித்து வருகின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
நந்திக்கடல் வெளி
முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் கடலுடன் கலக்கும் ஒரு நீரேரியாக நந்திக்கடல் அடையாளப்படுத்தப்படுகின்றது.
வனஜீவராசிகள் திணைக்களத்தினால் பாதுகாக்கப்பட்ட பகுதியாகவும் இது அடையாளப்படுத்தப்பட்டு இது தொடர்பான அறுவித்தல்களை பொது மக்களுக்கு வழங்கும் பொருட்டு அறிவித்தல் பலகைகளையும் நந்திக்கடலின் எல்லைகளில் நாட்டியிருப்பதை அவதானிக்கலாம்.
நந்திக்கடலின் நீரேந்து வாய்ப்பகுதியாக அமையும் இடங்களில் ஒன்றான மஞ்சள் பாலம் மற்றும் முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் முல்லைத்தீவு பெயர்ப்பலகை நாட்டப்பட்டுள்ள பகுதிக்கு நேராக உள்ள நந்திக்கடலின் திட்டுக்களில் இங்கு காட்டப்படும் காட்சிகள் படமாக்கப்பட்டன.
மஞ்சள் பாலத்தின் அருகில் வளர்ந்துள்ள மருது மரங்களின் பக்கமாக பயன்பாட்டுக்கழிவுகளை திறந்த வெளிக்கு வீசப்பட்டுள்ளதை அவதானிக்கலாம்.
அவ்வாறே வீதியில் முல்லைத்தீவு பெயர்ப்பலகை உள்ள இடத்திற்கு அண்மையில் உள்ள மரங்கள் அடர்ந்த சிறு திட்டின் விளிம்பில் ஒரு தொகுதி பயன்பாட்டு கழிவுகளை திறந்த வெளியில் வீசியிருப்பதையும் அவதானிக்கலாம்.
வீதிகளின் ஓரங்களில் வீசப்படும் பயன்பாட்டுக்கழிவுகளை வீதிகளை சுத்தம் செய்யும் ஒரு நாளில் மீண்டும் அகற்றும் ஏதுக்கள் உள்ள போதும் நந்திக்கடலின் பகுதிகளில் வீசப்படும் பயன்பாட்டுக் கழிவுகளை மீளவும் ஒரு நாளில் எடுத்தகற்றுவது என்பது அவ்வளவு இலகுவனதல்ல என இது தொடர்பில் சுற்றுச் சூழல் தன்னார்வலர்கள் சிலருடன் உரையாடிய போது அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
தொடரக்கூடிய ஆபத்து
ஒருவரைப் பார்த்து மற்றவர் செய்து கொள்ளும் இயல்பின் வழியில் நாட்டில் பல சட்ட மீறல்கள் நடைபெற்று வருவதை அவதானிக்கலாம்.
அது போலவே இதுவும் தொடர்ந்து நிகழும் வாய்ப்புக்களை அதிகம் கொண்டுள்ளது.
ஆரம்பத்திலேயே தடுத்து இது தொடர்பில் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.அல்லாது போகும் போது நந்திக்கடலின் பகுதிகளை தூர் வார வேண்டிய நிர்ப்பந்தத்தினை விரைவாக உருவாக்கி விடுவதோடு, அதிக பொருட் செலவையும் நேரத்தையும் விரையமாக்கி விடும் என்பதில் ஐயமில்லை.
இப்போதும் நந்திக்கடல் தூர்வார வேண்டிய நிலையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒருவர் வீதியின் ஓரத்தில் வீசிவிட்டுப் போகும் பயன்பாட்டுக்கழிவுகளைப் பார்த்து விட்டு, அவற்றை எடுத்தகற்றுவதோடு இந்த இடங்களில் இப்படி பயன்பாட்டுக்கழிவுகளை வீசுதல் பொருத்தமற்ற செயல் என சுட்டிக்காட்ட முனையாது; தாமும் தங்கள் பயன்பாட்டுக் கழிவுகளை வீதியிலும் பாலங்களின் கீழும் போட்டு விட்டுப் போகும் இயல்பை மக்களிடையே அவதானிக்க முடிகின்றது.
இந்த இயல்பின் அடிப்படையில் நந்திக்கடல் வெளியில் கொட்டப்படும் பயன்பாட்டுக்கழிவுகள் அச்சத்தை தரும் விடயமாகும்.
முரணாகும் செயற்பாடுகள்
இது சார்ந்து முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் செயற்பாடுகளை நினைவுகூரும் முல்லைத்தீவில் சமூகச் செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் ஒருவர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் நந்திக்கடலின் கரையில் அமைந்துள்ளது.வைகாசிப் பொங்கல் மற்றும் கடைசி பங்குனித் திங்கள் ஆகிய இரு வழிபாட்டு நாட்களிலும் அதிகளவிலான மக்கள் ஆலயச் சூழலுக்கு வந்து செல்கின்றனர்.
அப்போது அதிகளவில் வியாபாரச் செயற்பாடுகளும் நடைபெறுகின்றது. அனனதான நிகழ்வுகளும் கூடவே நடைபெறுகின்றது.
இதன் போது தோன்றும் பயன்பாட்டுக்கழிவுகளை நந்திக்கடலினுள் செல்லாதவாறு முன்னேற்பாடுகளை செய்து கொள்வதில் முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் கவனமெடுத்திருப்பதை கடந்த காலங்களில் அவதானிக்க முடிகின்றது.
குறிப்பாக பொலித்தீன் போன்ற இலகுவில் உக்கலடையாத குப்பைகளை நந்திக்கடலில் சேர்ந்து விடாதபடி அவர்களது செயற்பாடுகள் இருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அப்படியிருக்க நந்திக்கடலின் வெளிகளில் பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட இலகுவில் உக்கலடையாத பயன்பாட்டுக் கழிவுகளை கொட்டிவிட்டுச் செல்வதை தடுப்பதற்காக எத்தகைய நடவடிக்கைகளையும் இதுவரை செய்யாதிருப்பது ஒன்றுக்கொன்று முரணாக இருக்கின்றது.
கொஞ்சம் கொஞ்சமாக சேரும் பயன்பாட்டுக் கழிவுகள் பெரும் தொகையில் சேரும் போது அவற்றை அகற்றுவதற்கென புதிய செயற்பாடுகளைத் திட்டமிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.இப்போதே கவனமெடுத்துச் செயற்பட முடிந்தால் பின்னர் சிரமங்கள் இருக்கப்போவதில்லை என அவர் மேலும் குறிப்பிட்டார்.
பொறுப்பற்ற செயற்பாடு
கழிவு முகாமைத்துவம் தொடர்பில் இதுவரை பரவலான ஒருமித்த செயற்பாடு ஒன்று உருவாக்கப்பட்டு சீராக்கப்படவில்லை என்பதை முல்லைத்தீவு மாவட்டம் உள்ளிட்ட வடக்கின் பல பகுதிகளிலும் உணரத்தக்க வெளிப்பாடுகளை அவதானிக்க முடிகின்றது.
உயர்மட்ட அதிகாரிகள் இது தொடர்பில் பொறுப்பற்ற மெத்தனப் போக்கை கொண்டுள்ளார்களோ என்ற எண்ணம் தோன்றுவதை தவிர்க்க முடியாது.
நகரமயமாக்கலில் கழிவகற்றலும் பிரதான ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என்பதை கருத்திலெடுத்து பயன்பாடுடைய இயற்கை அமைப்புக்களை பேண பொருத்தமான செயற்பாடுகளை உரிய அதிகாரிகள் முன்னெடுக்க வேண்டும் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |