யாழ்.மாவட்ட அபிவிருத்தி தொடர்பில் தவிசாளர் நிரோஷ் வெளியிட்ட தகவல்
உள்ளூராட்சி மன்றங்களின் சபை அனுமதிக்கு பின்பே யாழிற்கான அபிவிருத்தியை ஆராய முடியும் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்துள்ளார்.
நகர அபிவிருத்தி அதிகார சபையினால் தயாரிக்கப்பட்ட யாழ்.குடாநாட்டின் பத்து ஆண்டுக்கான திட்டம் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் அனுமதிக்காக அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு அனுமதி கோரப்பட்டது.
சபைத் தீர்மானங்கள்
இதன் போது வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் 10 ஆண்டுகளுக்கான அபிவிருத்தித் திட்டம் உள்ளுராட்சி மன்றங்களுக்கு ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட அவைகள் அமைந்துள்ளன.
எனவே இதனை ஏற்பதாயின் உள்ளூராட்சி மன்றங்களின் சபைத் தீர்மானங்கள் அவசியம். சபைத் தீர்மானங்கள் இன்றி அபிவிருத்தினை ஏற்பது உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்களையும் காத்திரமான அபிவிருத்தி இலக்கினையும் மீறுவதாகும்.

சபையில் வரைபை நாம் ஆராய்ந்து காத்திரமான பொருத்தமான முடிவுகளை எடுக்கவேண்டும். அதுவரையில் ஒத்திவைக்க வேண்டும் என மாவட்ட அபிவிருத்திக் குழுவில் தெரிவித்தார்.
வல்வெட்டித்துறை நகரபிதா சிவாஜிலிங்கமும் வரைபில் போதாமைகள் காணப்படுகின்றன என்றார்.
இந்த விடயம் விவாதத்திற்கு உள்ளாகிய போது நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், மேற்படி வரைபை இன்றே நிறைவேற்ற வேண்டும் என்றும் நகர அபிவிருத்தி தொடர்பான விடயத்திற்கும் உள்ளூராட்சி மன்றத்திற்கும் என்ன தொடர்பு என கேள்வி எழுப்பினார்.
ஆட்சி முறைமை
இதற்கு பதிலளித்த தவிசாளர் நிரோஷ் ஆட்சி முறைமை தொடர்பான அறிவில் தாங்கள் பூச்சியமாக உள்ளீர்கள். உள்ளுராட்சி மன்றங்களே அபிவிருத்தி தொடர்பான விடயங்களில் அதிகாரமுடையவை. உள்ளூராட்சி மன்றங்களின் அனுமதியின்றி ஒத்துழைப்பின்றி அபிவிருத்தியினை முன்கொண்டு செல்ல முடியாது என்றார்.
இந் நிலையில் மாவட்ட அபிவிருத்தி அனுமதியை வழங்குவோம் பின்னர் தங்களுடைய சந்தேகங்களை உள்ளூராட்சி மன்றங்கள் தீர்த்துக்கொள்ளட்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.

இதனை வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் நிரோஷ் தாம் ஒட்டுமொத்தமாக ஏற்க முடியாதெனத் தெரிவித்தார்.
இந் நிலையில் எதிர்வரும் ஒரு மாதத்திற்குள் உள்ளூராட்சி மன்றங்கள் ஆராய்ந்து உரிய அவைத் தீர்மானங்களை வழங்க முடியுமா என அரச அதிபர் ம. பிரதீபனினால் கோரப்பட்டது.
அதற்கு தவிசாளர்கள் சம்மதித்த நிலையில் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் அமைச்சர் சந்திரசேகரனினால் உள்ளூராட்சி மன்றங்களின் அனுமதியைப் பெற்று எதிர்வரும் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் இந்தவிடயம் எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது.