அரசியல் கருவியான ஞானசாரர்.. காவி உடை விவகாரத்தில் திட்டமிட்டு காய்நகர்த்தும் சதி
சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் காவி உடை அகற்றப்பட்ட விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றது.
குறிப்பாக, இவ்விடயத்தை கொண்டு பலர் திட்டமிட்ட அரசியல் காய்களை நகர்த்தி வருகின்றார்கள் எனலாம்.
இந்நிலையில், வெலிபிட்டிய சாசன சங்கத்தின் தலைவர் ஹுகல ரத்னபால தேரர், இவ்விகாரம் தொடர்பில் பாரியதொரு குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்துள்ளார்.
உண்மையில், ஞானசார தேரர் சிறைக்கு சென்றிருப்பது நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் தான், இருப்பினும் அவருக்காக பலர் தற்போது கொந்தளிப்பதும் அவருக்காக குரல் கொடுப்பதும் ஏன்?
எழுப்பப்படும் சர்ச்சைகள்
அவர் மீது பல குற்றச்சாட்டுக்கள் நிலுவையில் இருக்கும் இத்தருணத்தில் அவருக்காக ஏன் பல முக்கியஸ்தர்கள் களமிறங்கி போராடி வருகின்றனர்? எனவெல்லாம் கேள்விகள் பெருமளவில் எழுப்பப்பட்டு வருகின்றன.

இவ்வாறிருக்கையிலேயே, ஹுகல ரத்னபால தேரர், "கலகொட அத்தே ஞானசார தேரர், சிறைச்சாலைக்கு சென்றிருப்பது நாட்டிற்காகவோ அல்லது புத்தசாசனத்திற்காகவோ அல்ல, மாறாக அவர் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டிலேயே சிறைக்கு சென்றுள்ளார்.” என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் நேற்று குறித்த சங்கத்தினால் நடத்தப்பட்ட விசேட ஊடக சந்திப்பில் அவர் இந்த பகிரங்க கருத்தை முன்வைத்திருந்தார்.
ஒரு நாட்டில் நீதிமன்றம் எடுக்கும் தீர்மானங்களை அவமதிக்கும் செயற்பாடு எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளமுடியாதது. அத்துடன், சட்டம் என்பது அனைவருக்கும் சமமானதும் கூட.

இவ்வாறிருக்கையில், ஞானசாரர் விவகாரத்தில் அவர் மீது இத்தனை குற்றச்சாட்டுக்கள் இருக்கும் போது அவருக்காக நாட்டில் சர்ச்சைகளை ஏற்படுத்தும் நபர்களின் உண்மையான நோக்கம் தான் என்ன?
சொல்லப் போனால், முந்தைய அரசாங்கங்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து அவர்களால் வழங்கப்பட்ட வரப்பிரசாதங்களை பெற்ற பலரே இன்று ஞானசார தேரருக்காக குரல் கொடுக்கின்றனர் என ஹுகல ரத்னபால தேரர் குறிப்பிட்டார்.
ராஜபக்சக்களின் பினாமிகள்..
ஞானசார தேரர் மீதான வழக்குகளை நோக்கும் போதும், இனமுறுகல்களை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாகவும் இனவெறி கருத்துக்களை வெளியிட்டதாகவும் நீதிமன்ற அவமதிப்பை செய்ததாகவும் தான் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், சிறைச்சாலைக்குள் அவரின் காவி உடை அகற்றப்பட்ட விவகாரம் தற்போது கொந்தளிப்பாக மாறியுள்ளது இதனை பலர் அரசியல் பகடைக் காயாகவே பயன்படுத்திக் கொள்கின்றார்கள் எனவும் ஹுகல ரத்னபால தேரர் குற்றம் சாட்டியிருந்தார்.
முந்தைய அரசாங்கங்களின் மக்களால் விரட்டியடிக்கப்பட்ட அரசியல்வாதிகளிடம் தஞ்சம் புகுந்த தேரர்களே தற்போது இந்த போராட்டங்களில் குதித்துள்ளனர் என ரத்னபால தேரர் கூறியிருந்தார்.
குறிப்பாக, அந்த அரசியல்வாதிகள் குறித்து தற்போது பல குற்றச்சாட்டுக்கள் அம்பலமாகியுள்ள நிலையிலும் அவர்களில் பலர் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையிலும் அவர்களுக்காகவே இந்த தேரர்கள் இவ்வாறு தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
அவரின் கருத்துக்களை சற்று ஆராய்ந்தால், ஞானசாரருக்காக தற்போது களத்தில் இறங்கியுள்ள தேரர்கள் ராஜபக்சக்களோடு இருந்து பல வரப்பிரசாதங்களை பெற்றவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.