அரசாங்கம் மீது கேள்விகளை தொடுக்கும் கம்மன்பில
உலக வங்கியிடமிருந்து பெறப்பட்ட 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தரப்பும், உலக வங்கியும் உண்மையாகச் செயற்படுகின்றனவா என்ற உண்மையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது
முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில ( Udaya Gammanpila ), இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
உலக வங்கியின் உத்தியோகபூர்வ இணையத்தளம்
இது தொடர்பில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கம்மன்பில, தற்போதைய அரசாங்கம் எந்தவொரு அமைப்பிடமிருந்தோ அல்லது ஸ்தாபனங்களிடமிருந்தோ எந்தவொரு கடனுதவியையும் பெறவில்லை என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான விஜித ஹேரத் வெளியிட்ட கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு மாத காலத்திற்குள் கடன் பெற்றுள்ளதா? இல்லையா என்பதை சரிபார்க்க உலக வங்கியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் பார்க்குமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.
இதில் அரசாங்கம் உண்மையாக இருந்தால், உலக வங்கி பொய் சொல்ல வேண்டும் அல்லது உலக வங்கியின் கூற்று உண்மையாக இருந்தால், அமைச்சர் விஜித ஹேரத் பொய் சொல்கிறார் என்ற எடுத்துக்கொள்ள முடியும் என்று கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
திறைசேரி உண்டியல்கள் மற்றும் பத்திரங்கள்
நேற்றைய நிலவரப்படி, தற்போதைய அரசாங்கம், திறைசேரி உண்டியல்கள் மற்றும் பத்திரங்கள் மூலம் ஒரு மாதத்தில் 958.75 பில்லியன் ருபாய் கடன்களை பெற்றுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அரசாங்கம் பணத்தை அச்சிடவில்லை என்ற விஜித ஹேரத்தின் கூற்றையும் கம்மன்பில நிராகரித்துள்ளார்.
அரசாங்கம் தமக்கு நேரடியாகக் கடன் வழங்குவதற்குப் பணத்தை அச்சிடவில்லை என்றாலும், அந்நியச் செலாவணியை வாங்குவதற்கும் நிதிச் சந்தையில் பணப்புழக்கம் மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும் பணம் அச்சிடப்பட்டது என்பதை இலங்கை மத்திய வங்கியின் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளதாக கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |