பட்டப்படிப்பிற்காக சிறைக்குச் செல்லும் கம்மன்பில
சிறைக்கு சென்று வந்த அரசியல்வாதிகள் சிலர் பல்கலைக்கழகத்தில் பெறமுடியாத கல்வியை சிறையில் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கும் நிலையில் நானும் பட்டப்படிப்பு அல்லது டிப்ளோமாவாவது எடுப்பதற்கு சிறை செல்லப் போவதாக பிவித்துரு ஹெல உருமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைமையகத்தில் இன்று (2025.10.29) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தென்பகுதி அமைச்சரின் விருப்பம்
தென்பகுதியை பிரதிநிதித்துவம் செய்யும் அமைச்சர் ஒருவர் என்னை சிறையில் அடைக்கும் வரை தான் நித்திரை கொள்ள மாட்டேன் என கூறியுள்ளார். என்னிடம் சாட்சிகள் இல்லை அதனால் அவர் பெயரை குறிப்பிடுவது நியாயமில்லை.

நான் சாதாரண மனிதர் தானே. அவர் அமைச்சர் என்பதால் அவரின் நித்திரைக்காகவும் நான் சிறை செல்லப் போகிறேன். எனக்கும் பிரச்சினை இல்லாமல் இருக்கலாம். நான் அரசுக்கு எதிராக பொய்க் குற்றச்சாட்டுக்களை தெரிவிக்கவில்லை.
நான் தொழில் முறை சட்டத்தரணி என்பதால் எனக்கு நன்றாக தெரியும் குற்றம் செய்யவில்லை என்று. அப்படியில்லை என்றால் நீதிமன்றம் சென்று எனது பக்க உண்மைகளை கூறி சிறை செல்வதை தவிர்த்துக் கொள்வேன் என குறிப்பிட்டுள்ளார்.