மீண்டும் ஒரு தாக்குதல் இடம்பெறக் கூடும் என காலி முகத்திடல் போராட்டகாரர்கள் அச்சம்
அண்மையில் கொழும்பில் ஜனாதிபதி செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீதான இராணுவத் தாக்குதலைத் தொடர்ந்து காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றொரு தாக்குதல் தொடர்பில் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
காலி முகத்திடலில் இடம்பெற்றுவரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முக்கிய பிரமுகர் அருட்தந்தை ஜீவந்த பீரிஸ், மீண்டுமொரு தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், ஆர்ப்பாட்டக்காரர்கள் மாற்றத்தை தொடர்ந்து வலியுறுத்துவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை காலி முகத்திடலில் போராட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து வெளியேறப்போவதாக அறிவித்த சில நிமிடங்களிலேயே இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியிருந்தனர்.
கூடாரங்கள் மற்றும் ஏனைய கட்டமைப்புகள் அழிப்பு
சுமார் (வெள்ளிக்கிழமை) 1 மணியளவில் காலி முகத்திடலை சுற்றி வளைத்த நூற்றுக்கணக்கான படையினர் ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களை விரட்டியடித்தனர்.
பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் ஜனாதிபதி செயலகத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் மற்றும் ஏனைய கட்டமைப்புகளையும் அழித்துள்ளனர். இந்த நடவடிக்கையின் போது காலி முகத்திடலுக்குச் செல்லும் வீதிகள் இராணுவத்தினரால் மூடப்பட்டிருந்தன.
இதனால் அந்த வளாகத்திற்குள் யாரும் நுழையவோ அல்லது வெளியேறவோ முடியாதிருந்தது.
காலி முகத்திடலுக்குள்ளும், அப்பகுதியைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளுக்கு அருகிலும் பல போராட்டக்காரர்கள் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.