ஒற்றையாட்சி முறைமையால் கேள்விக்குறியாகும் தமிழர்களின் வாழ்க்கை - கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு
ஒற்றையாட்சி தமிழினத்தினுடைய எதிர்காலத்தை மட்டும் கேள்விக்குட்படுத்தாது. அது எங்களுடைய முஸ்லிம், மலையக சமூகங்களினுடைய இருப்பையும் கேள்விக்குட்படுத்தும் என நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
நேற்று(20.09.2026) மட்டக்களப்பில் இடம்பெற்ற சட்டத்தரணி க.சுகாஸின் “தமிழன் கனவு” எனும் புத்தக வெளியீட்டு நிகழ்வில் அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழன் கனவு என்ற அந்த சொல்லாடலைப் பற்றி நாங்கள் சிந்தத்தால், கனவு காண்பதற்கு முதலிலே தமிழன் வாழ வேண்டும். இந்தத் தீவிலே தமிழன் என்ற அடையாளத்தோடு வாழ்வதே இன்றைக்கு ஒரு கடும் போராட்டமாக இருக்கிறது.
வெறுமனே தமிழன் என்று ஒரு தனிநபர் வாழ்வதல்ல. தமிழன் என்ற அந்த வார்த்தைக்கு ஆழமான கருத்து இருக்கின்றது. அந்தத் தமிழன் என்ற வார்த்தையோடு எங்கள் கலாச்சாரம், மொழி, எங்களுடைய நிலப்பரப்பு அனைத்தும் சம்பந்தப்படுகின்றது.
தமிழர்களுக்கான அடையாளம்
ஆகவே, அந்த கூட்டு வாழ்க்கையைப் பற்றி நாங்கள் சிந்திக்கின்ற போது எங்களுடைய எதிர்காலமே இன்றைக்கு ஒரு கேள்விக்குறியாக மாறிக்கொண்டு இருக்கின்றது.

அந்த எதிர்காலம் கேள்விக்குறியானது இன்றைக்கு நேற்று அல்ல கிட்டத்தட்ட 77 வருடங்களுக்கு முன்பதாகவே அது ஆரம்பித்துவிட்டது. அதற்கு காரணம் என்னவென்று நாங்கள் தேடிப் பார்த்தால், அதை மிகச் சுருக்கமாக நாங்கள் இந்த நாட்டிலே இருக்கக்கூடிய ஆட்சிமுறையாக அடையாளப்படுத்தலாம்.
எத்தனையோ பிரச்சனைகள் இருக்கிறன. ஆனால், அந்த அத்தனை பிரச்சனைகளுக்கும் உரிய மூலக்காரணமாக துரதிர்ஷ்டவசமாக இந்த நாட்டின் ஆட்சிமுறைமையே இருக்கின்றது.

இந்த நாட்டிலே வாழுகின்ற பெரும்பான்மை மக்கள், கிட்டத்தட்ட 75 வீதமான சிங்கள பௌத்த மக்கள் தங்களுடைய அடையாளத்தை முன்னிலைப்படுத்தி தங்களுடைய அடையாளத்தை மட்டும் பாதுகாத்து, தங்களுடைய அடையாளத்திற்கு மற்றவர்களுடைய அடையாளம் அச்சுறுத்தலாக பார்க்காமல், ஒரு பொது அடையாளத்தை நோக்கி 1948ஆம் ஆண்டிலிருந்தே சிங்கள மக்கள் பயணித்திருந்தார்களாக இருந்தால், தமிழர்கள் என்ற அந்த அடையாளத்திற்கு எந்தவிதமான அச்சுறுத்தல்களும் வந்திருக்காது என்றார்.