ஈழத் தமிழர்களின் எதிர்காலம் என்ன! அரசியல்வாதிகளே உங்கள் தீர்வை முன்வையுங்கள்
ஈழத் தமிழர்களின் இழந்துபோன இறைமையை மீட்பதற்கான ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் அவமானகரமாக தோற்கடிக்கப்பட்டது மட்டுமல்ல ஈழத் தமிழர்களை எதிரிகளிடம் நிர்வாணமாக சரணடையும் துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளிவிட்டது.
தமிழர்கள் தமது கொள்ளளவுக்கு மிஞ்சிய பெருந்தியாகத்தை செய்தும், சண்டைக்களங்களில் வெற்றி பெற்ற போதும், யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்டடோம் என்பதையும், நாம் பட்ட துன்ப துயரங்களையும், வலிகளையும் மனதில் நிறுத்தி அந்த உணர்வோடும், வைராக்கியத்தோடும் நமக்கான எதிர்காலத்திற்கான வழியை தேடவேண்டும்.
கடந்தகால சம்பவங்களை நினைவுகளாகவும், கொள்கைகளாகவும் வரித்துக் கொண்டு, கடந்தகால சம்பவங்களுக்காக இப்போதும் தமிழினம் தமக்குள்ளேயே முட்டி மோதி சீரழிந்து கொண்டிருப்பது தமிழின விடுதலைக்கான பாதையை ஒருபோதும் திறக்க மாட்டாது.
தமிழ்த் தேசியம்
இப்போது கடந்தகால தோல்விகளில் இருந்து பாடங்களை கற்றுக்கொண்டு, இன்றைய 21ஆம் நூற்றாண்டுக்கான புவிசார் அரசியல், முழுஉலகம் தழுவிய பூகோள அரசியல் ஆகிய இரண்டுக்குமான இடைவெளிகளில் இலங்கைத்தீவில் தமக்கான பாதுகாப்பையும், வாழ்வையும், வளத்தையும் உறுதிப்படுத்த ஈழத்தமிழர்கள் செய்ய வேண்டியது என்ன என்பதை ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் எழுத்து மூலம் முன்வைக்க வேண்டும்.
அரசியல்வாதிகளால் ஒரு முழுமையான நூற்றாண்டு காலமளவிற்கான ஒரு செயற்திட்டத்தை தற்போது முன்வைக்க முடியாதென்றால் குறைந்தபட்சம் ஒரு 10 ஆண்டுகளுக்கான(2026–2036) அரசியல் செயற்த்திட்டம் ஒன்றையாவது முன்வைக்க வேண்டும்.

ஈழத்தமிழ் அறிஞர்கள் தமிழர்களுக்கான நிரந்தரமான அரசியல் நிலைப்பாட்டை முன்வைப்பது அவர்களுடைய பொறுப்பும், கடமையும் என்ற அடிப்படையில் “ஈழத் தமிழர்களுக்கான உள்நாட்டு அரசியல்–புவிசார் அரசியல் மூலோபாய வழிவரைபடம் என்று சொல்லத்தக்க கொள்கைச் செயற்திட்ட எழுத்துவடிவிலான ஆவணத்தை தமிழ்த் தேசியம் பேசுகின்ற கட்சிகள் உடனடியாக தயாரிக்க வேண்டும்.
அதனை தற்போதைய சூழலில் சாத்தியமான ஜனநாயக, இராஜதந்திர, பொருளாதார, நிறுவனமய, மற்றும் சர்வதேச வழிமுறைகளை ஒருங்கிணைத்து ஒழுங்குபடுத்தக் கூடியவதற்கான ஒரு செயல்திட்ட ஆவணமாக வடிவமைப்பது அவசியமானது.
2009இல் முள்ளிவாய்க்காலில்ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்ததுதான் மூலம் ஈழத்தமிழர்களின் அரசியல் பிரச்சினை முடிவுக்கு வரவில்லை. மாறாக அரசியல் இலக்கை அடைவதற்கான கருவியாக சர்வதேச நீதிவிசாரணை, ஐநா மனித உரிமை விசாரணை என ஈழத்தமிழர் பிரச்சினை சர்வதேச அரசியலில் பேசுபொருளாக மாறி இருப்பினும் அதற்கான நீதியோ, நியாயமோ, தீர்வோ கிட்டுவதற்கான வாய்ப்புகள் தற்போதைய நிலையில் நெருக்கமாக இருப்பதாக தெரியவில்லை.
இந்த நிலையில் தமிழ் மக்களிடம் பல்வேறுபட்ட கேள்விகள் எழுகின்றன. “மீண்டும் எவ்வாறு போராடுவது?” எந்தவெரு அரசினதும் ஆதரவின்றி விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தை நடத்தி தாயக நிலப்பரப்பின் பெரும்பகுதியை எமது கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருந்தும் முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் மனித பேரவலத்தோடு விடுதலைப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டுவிட்டது.
அதன் பின்னராவது இலங்கைத்தீவில் தமிழர்கள் பாதுகாப்பாகவும், கண்ணியமாகவும், தமது வரலாற்றுத் தாயக நிலப் பகுதியில் சுதந்திரமான அரசியல், பொருளாதார, பண்பாட்டு உரிமைகளுடன் வாழக்கூடிய வகையில் நிலையான அர்த்தபுஷ்டியுள்ள அரசியல் அதிகாரத்தையும், அரசியலமைப்பு ஊடான நிறுவன வலிமையையுடைய தேசக்கட்டுமானத்தையும் எவ்வாறு உருவாக்குவது? என்ற தேடலும், ஆய்வும், அதன் வழியேயான செயற்பாடுமாகவே தமிழ் அரசில் இருக்க வேண்டும்.
முள்ளிவாய்க்கால்
இங்கே முள்ளிவாய்க்கால் தந்த பெருவலியை மறக்காமல், முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் தமிழர் அபிலாசை வென்றெடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை மறுபரிசீலனை செய்து புதிய பாதைக்குச் செல்வதாக அமைந்திருக்க வேண்டும்.
இலங்கைத்தீவின் அமைவிடம் காரணமாக அது தற்போது ஒரே நேரத்தில் வல்லரசுகளினதும், பலம்வாய்ந்த சக்திகளினதும் கடல்சார் அளுகைப் போட்டி, மற்றும் பொருளாதார, மூலோபாய நலன்களை அடைவதற்கான போட்டிக்களமாக எதிரும் புதிருமான சக்திகள் சந்திக்கும் சந்திப்புள்ளியாக இந்து சமுத்திரத்தில் இலங்கைத்தீவு முன்னெப்பொழுதும் இல்லாத அளவிற்கு அந்நிய சக்திகளின் வேட்டைக் களமாக மாறிவிட்டது.

இந்நிலையில் இந்தியாவின் இலங்கைத் தொடர்பில் தமிழர் தாயகத்தின் கேந்திர தன்மையை மனதில் கொண்டு தொடர்ந்து தனது செல்வாக்கை தமிழர் தாயகத்தில் பேணுவதற்காக வட- கிழக்கு பகுதிகளுடன் நேரடியாகத் தொடர்புடைய இணைப்புத் திட்டங்களாக காங்கேசன்துறை-நாகப்பட்டினம் படகு, யாழ்ப்பாணம்-சென்னை விமான இணைப்பு, காங்கேசன்துறை துறைமுக மேம்பாடு, மின்-கட்டம் இணைப்பு, திருகோணமலை மற்றும் கொழும்பு தொடர்பான பொருளாதார இணைப்பு போன்ற செயல் நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபட்டுள்ளது.
அதே நேரத்தில் சீனா–இலங்கை உறவு கடந்த காலகட்ட மூலோபாய கூட்டுறவு கூட்டு (strategic cooperative partnership) என்ற நிலையில் தொடர்கிறது. கொழும்பு துறைமுக நகரம் (Colombo Port City), அம்பாந்தோட்டை துறைமுகம், கடல் சார்பு பொருளாதாரம்(maritime economy), டிஜிட்டல் பொருளாதாரம் (digital economy), பசுமை அபிவிருத்தி (green development), போன்றவை இருதரப்பு ஒத்துழைப்பின் ஊடாக சீன இலங்கையில் நிலை எடுத்திருக்கிறது.
அதே நேரத்தில் சர்வதேச நிதி நிறுவனங்கள் இலங்கைப் பொருளாதாரத்தில் தங்கள் பங்கை வகிக்க முற்படுகின்றன. IMF திட்டத்தின் கீழ் இலங்கை தொடர்ந்து பொருளாதார மறுசீரமைப்பை மேற்கொண்டு வருகிறது. 2026 மே மாதத்தில் IMF Executive Board ஐந்தாம் மற்றும் ஆறாம் மதிப்பாய்வுகளை நிறைவு செய்து அலங்கைக்கு சுமார் 695 மில்லியன் அமெர்க்க டொலர் நிதியை விடுவித்தது.
இதிலிருந்து நமக்கு ஒரு முக்கியமான அரசியல் பாடம் கிடைக்கிறது. அதேசமயம் இலங்கை தீவுக்குள் அந்நிய தலையீடு என்ற வரைபடமும் தெளிவாகத் தெரிகிறது. ஆகவே இன்றைய நிலையில் தமிழர்கள் “ தேசிய இனப் பிரச்சpனை” என்ற நிலையிலோ, அல்லது இனப்படுகொலைக்கான சர்வதேச நீதி என்ற நிலையிலோ மட்டும் தங்கி இருக்க முடியாது.
அதற்கு அப்பாலும் பாக்கு நீரிணை அரசியல் பொருளியல், இந்து சமுத்திர அரசியல் பொருளியல், மற்றும் இணைப்பு(connectivity), இணை பங்காளிகளாக ஈழத் தமிழர்கள் தங்களை நிலைநிறுத்த வேண்டும். அதற்கான செயற்திட்டங்களை இப்போதே தமிழ அரசியல் பரப்பில் அரசியல்வாதிகளும் அறிஞர்களும் முன் வைக்க வேண்டும்.
அவ்வாறு இல்லாவிட்டால் இன்னும் பத்து ஆண்டுகளுக்குப் பின்னரும் வடக்கு–கிழக்கின் அரசியல் நிலையைப் பற்றி நமக்குப் பின்னே வருவோர் கேட்கக்கூடிய கேள்விகளாக 1. தமிழர்களின் நில உரிமை பாதுகாக்கப்பட்டுள்ளதா
2. மக்கள் தமது பகுதிகளில் பாதுகாப்பாக வாழ்கிறார்களா
3. உள்ளூர் அரசியல் நிறுவனங்களுக்கு உண்மையான அதிகாரம் உள்ளதா
4. நிலம் மற்றும் இயற்கை வளங்கள் தொடர்பான முடிவுகளில் மக்களுக்கு தீர்மானிக்கும் அதிகாரம் உள்ளதா
5. வடக்கு–கிழக்கு பொருளாதாரம் இலங்கையின் பிற பகுதிகளுடன் சமமாக இணைந்துள்ளதா
6. இந்தியா மற்றும் உலகத்துடனான நேரடி பொருளாதார இணைப்புகள் உருவாகியுள்ளனவா
7. தமிழ் இளைஞர்களுக்கு வேலை, கல்வி, தொழில்நுட்ப வாய்ப்புகள் உள்ளனவா
8. காணாமல் போனோர், போர் நினைவுகள், நீதி ஆகியவற்றில் நிறுவன ரீதியான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா
9. தமிழ் அரசியல் கட்சிகள் குறைந்தபட்ச பொதுத்திட்டத்தில் ஒன்றிணைய முடியுமா
10. உலகத் தமிழர் சமூகத்தின் அறிவு, முதலீடு, நிறுவனத் திறன் வடக்கு–கிழக்கின் வளர்ச்சியுடன் இணைக்கப்பட்டுள்ளதா
11. தமிழர் தாயகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் எவ்வளவு பேர் நாட்டை விட்டு வெளியேறினர்
12) இன்னும் பத்து ஆண்டுகளின் பின் ஈழத் தமிழர்களின் குடித்தொகை விகிதம் என்ன அது 50 ஆண்டுக்கு பின் எவ்வாறு இருக்கும்? என்ற கேள்விகளை கேட்பதோடு உங்கள்மீது மீண்டும் மீண்டும் பழிசுமத்துவதோடு மாத்திரமே தமிழர் அரசியல் பயணிக்கும்.
ஆகவே இத்தகைய அவப்பெயரிலிருந்து விடுபட்டு இப்போதே ஈழத்தமிழர்களின் அரசியல் மூலோபாயத்தின் முக்கிய பகுதியான அரசியல் மறுசீரமைப்பு செயல்திட்டம் ஒன்றை முன்வையுங்கள்.
தமிழ் தேசிய அரசியல் பேரவை
அதுவே இன்றுள்ள முதன்மைத் தேவையாக உள்ளது. தமிழ் அரசியல் தரப்பில் 2009ற்கு பின்னரான காலத்தில் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனையாகவும், சவாலாகவும் அமைந்திருப்பது ஒருங்கிணைந்த நீண்டகால அரசியல்த்திட்ட வரைபு இன்மையும், சிங்கள தேசத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரலை புரிந்து கொள்ளும் அரசறிவியல் முதிர்ச்சி இன்மையும்தான்.
அதலால் முதலில் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கியதான ஒரு "தமிழ் தேசிய அரசியல் பேரவை"(“Tamil National Political Council”) போன்றதான ஏதோ ஒரு அவையென்று உருவாக்கப்பட வேண்டியுள்ளது. இந்த அவை ஒரு புதிய கட்சி அல்ல, அது தமிழர்களுக்கான தாய் நிறுவனமாக தொழிற்படுவதாக இருக்கும்.

அதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாணசபை பிரதிநிதிகள், உள்ளூராட்சிசபை பிரதிநிதிகள், சட்ட நிபுணர்கள், பொருளாதார நிபுணர்கள், புவிசார் அரசியல் ஆய்வாளர்கள், புலம்பெயர் பிரதிநிதிகள், பெண்கள் பிரதிநிதிகள், இளைஞர் பிரதிநிதிகள், சிவில் சமூக அமைப்புகள், பத்திரிகையாளர்கள், மதத் தலைவர்கள் ஆகியோரை உள்ளடக்கிய கொள்கை திட்டமிடல், ஒருங்கிணைப்பு அமைப்பாக அது செயல்படுத்தப்பட வேண்டும்.
அதன் பணி தேர்தலில் யாரை நிறுத்துவது யாரை வெல்ல வைப்பது என்பதல்ல. தமிழச் சமூகத்தின் குறுங்கால, நீண்டகால குறைந்தபட்ச, அதிகபட்ச தேசிய நலன்கள் என்ன? என்பதை ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை கண்டறிவதற்கான ஒரு அமைப்பாக அதனை உங்களால் கட்டமைக்க முடியுமா என்பதைப் பற்றி சிந்தியுங்கள்.
இப்போதும் நடக்க முடியாத, நடத்துவதற்கு சாத்தியமற்ற ஒரு மாகாணசபை தேர்தல் பற்றியும், அவ்வாறு நடக்காத ஒரு தேர்தலுக்கு முதலமைச்சர் தெரிவு செய்வது பற்றியும் வீண் விவாதங்களை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். இன்றைய எம்பிபி அரசாங்கத்தின் அரசியல் நிலைப்பாட்டை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
ஈழத்தமிழர்கள்
தமக்கு வடமாகாணத்தில் ஒரு பெரிய வெற்றி கிடைக்குமானால் மாகாண சபை தேர்தலை நடத்த தயங்க மாட்டார்கள். ஆனால் அதற்கான சாத்தியம் வடமாகாணத்தில் தற்போத இல்லை என்பதனால் நிச்சயமாக அவர்கள் மாகாணசபைத் தேர்தலை நடத்த வாய்ப்பில்லை.
அதே நேரத்தில் தமிழர்கள் 13ம் திருத்தம் வேண்டுமா, வேண்டாமா என்ற இரு முனை கத்திச்சண்டை, குடும்பிச்சண்டை ஊடக விவாத சண்டைகளில் இப்போது சிக்கிக்கொள்ள வேண்டிய தேவை எதுவும் கிடையாது. இதனால் எந்த பலனும் கிட்டாப்போவதில்லை.
எனவே இப்போது இருக்கின்ற அரசியல் சூழமைவில் உடனடியாக எதை பெற முடியுமோ அதைப் பெற்றுக் கொண்டு இலக்கை நோக்கி பயணிப்பதுவே அரசியல் சாணக்கியமாக அமையும். மொழி உரிமை, நில உரிமை, காணாமல் போனோர், அரசியல் கைதிகள் நிலைமைகள், நினைவேந்தல் உரிமை, இராணுவமயமாக்கல் குறைப்பு, உள்ளூராட்சி அதிகாரம் என்பவற்றைப் பற்றி பேசுவதும் செயற்படுவதும் அவசியமாக உள்ளது.
அதே நேரத்தில் மாகாணசபை நியதிச்சட்ட ஆக்க அதிகாரம், நிர்வாக அதிகாரம், நிதி அதிகாரம், நில அதிகாரம், இயற்கை வள மேலாண்மை, கல்வி/கலாச்சார அதிகாரம், உள்ளூர் பொருளாதாரத் திட்டமிடல் போன்றவற்றில் எவற்றையெல்லாம் பெற முடியுமே அவற்றைப் பெற அதிக கவனம் செலுத்துவதும் அவசியமானது.
இத்தகைய சூழலில் ஈழத் தமிழர்களின் அரசியல் சுயநிர்ணயம், கூட்டாட்சி, பிராந்திய தன்னாட்சி போன்ற பல்வேறு அரசியல் கருத்துகள் பற்றிய ஜனநாயக விவாதத்தை திறந்து வைப்பதும் அதனுாடாக நீண்டகால அரசியல் தீர்வு பற்றிய உரையாடலையும், ஆய்வுகளையும், திட்டமிடலையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது.
இறுதி அரசியல் இலக்கை அடைவதற்காக இலட்சியத்தை விட்டுக்கொடுக்காமல், அதே சமயம் இடைக்காலத்தில் கிடைக்கக்கூடிய அதிகாரங்களையும், உரிமைகளையும் பெறுவதில் பின்நிற்காமல் தொடர் செயற்பாட்டில் ஈடுபடுவது அவசியம். ஈழத்தமிழர்கள் அரசியலில் ஆதாள பாதாள தோல்விகளும், இட்டு நிரப்ப முடியாதளவு இடைவெளிகளும் ஏற்பட்டிருக்கும் இத்தருணத்தில் தமிழ் அரசியல் பரப்பில் அரசியல்வாதிகளும், அறிஞர்களும் வாழவிருந்து வீண் அக்கப்போர்கள் நிகழ்த்துவதில் தமிழினத்திற்கு எதுவும் கிட்டப்போவதில்லை.
ஆகவே ஒரு நெருக்கடி மிகுந்த காலகட்டத்தில் இப்போதாவது உங்கள் திட்ட முன்மொழிவுகளை தமிழ் மக்களுடைய நலன் சார்ந்தும் அவர்களுடைய அரசியல் அவிலாசைகளை வென்றெடுப்பது சார்ந்தும் முன்வையுங்கள் என்று காலம் உங்களுக்கு வேண்டி நிற்கிறது.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.thibaharan அவரால் எழுதப்பட்டு, 27 September, 2026 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.