கிளிநொச்சி சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் இடம்பெற்ற முறைகேடுகள்! குற்றப் பத்திரிகை தாக்கல்
கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் குற்றப் பத்திரிகை தயாரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட ஒழுக்காற்று அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
முறைகேடுகள்
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் நியமிக்கப்பட்ட ஆரம்ப புலனாய்வு விசாரணை குழு, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் மூன்று ஊழியர்கள் ஆகியோரை குற்றவாளிகளாக இனம்கண்டுள்ளனர்.
இதற்கமைவாக அவர்கள் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு மேலதிக நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட ஒழுக்காற்று அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
கிளிநொச்சி ஊடகவியலாளர் ஒருவரினால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக கோரப்பட்ட தகவல்களுக்கு அமைய குறித்த விடயம் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது.
புலன்விசாரணை அறிக்கை
கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் கணக்காய்வு அறிக்கைகள் மற்றும் கணக்காளரின் நடவடிக்கைகள் தொடர்பில் ஆரம்ப புலன்விசாரணையை மேற்கொள்வதற்கு மூவரடங்கிய விசாரணை குழு தமது விசாரணையை மேற்கொண்டு ஆரம்ப புலன்விசாரணை அறிக்கையை சமர்பித்திருந்தது.
இந்த புலன்விசாரணை அறிக்கையின் பிரகாரம் கிளிநொச்சி சுகாதார சேவைகள் பணிப்பாளர், கணக்காளர், மற்றும் முகாமைத்துவ சேவை அலுவலர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இருவர் என ஐவர் குற்றவாளிகளாக இனம்காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைவாக அவர்களுக்கான மாதிரி குற்றப் பத்திரிகை ஆரம்ப புலன்விசாரணை குழுவினரால் சமர்பிக்கப்பட்டுள்ளது.
