பொலிஸாருக்கும் இளைஞர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு.. பாதுகாப்பு அமைச்சு அதிரடி தீர்மானம்
தெரணியகல பொலிஸார் மற்றும் ஒரு தொகுதி குடியிருப்பாளர்களுக்கு இடையே அண்மையில் நடந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
இதில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் இன்று (24) நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இந்த சம்பவத்தில் பொலிஸார் தரப்பில் ஏதேனும் தவறு நடந்திருந்தால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வலியுறுத்தினார்.
மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
பெயர் குறிப்பிடாத ஒரு மனுவின் அடிப்படையில், அவிசாவெல்ல பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியகத்தைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள் குழு ஒன்று, ஜூன் 19 ஆம் திகதி தெரணியகல, நூரி வீதியில் அமைந்துள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தியது.
பொலிஸார் விசாரணை
அவ்வீட்டில் போதைப்பொருட்களுடன் இருந்த நான்கு இளைஞர்களை பொலிஸார் கைது செய்தனர். இருப்பினும், அந்த நேரத்தில், பொலிஸாரிடம், தங்களிடம் போதைப்பொருள் இல்லை என்று இளைஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், அங்கு இருந்த ஒரு குழுவினர், கைது செய்யப்பட்ட இளைஞர்களில் இருவரை விடுவிக்குமாறு கோரி, சாதாரண உடையில் இருந்த ஒரு பொலிஸ் அதிகாரியை மிரட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையில், பொலிஸ் அதிகாரி ஒரு சந்தேக நபரின் கைவிலங்கை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளார். அதன் பிறகு, அந்தக் குழுவினர் கூடி பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், ஒரு பொலிஸ் அதிகாரியின் பணப்பையில் ஐஸ் இருப்பதாகக் கூறி, ஒரு இளைஞன் ஆத்திரமூட்டும் வகையில் நடந்துகொண்டதாகவும் பின்னர், அந்தப் பணப்பையை தெரணியாகல பொலிஸாரிடம் ஒப்படைத்தாகவும் தெரிவிக்கப்பட்டது.
அந்த நேரத்தில், பொலிஸ் காவலில் இருந்த தாக்குதல் நடத்திய சந்தேக நபர்களையும் விடுவித்தனர். இந்தத் தாக்குதலில் காயமடைந்த நான்கு பொலிஸ் அதிகாரிகளும் சிகிச்சைக்காக அவிசாவெல்ல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும், பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து தெரணியாகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறனர்.