நாடளாவிய ரீதியில் நீண்ட நாட்களின் பின் எரிபொருள் விநியோகம்(Photos)
கிளிநொச்சியில் கடைசி இலக்கங்களின் அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கிளிநொச்சி- அக்கராயன் குளம் பல நோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்திலே நேற்று(24) கடைசி இலக்கங்களுக்கு அமைவாக பெட்ரோல் விநியோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொதுமக்கள் நெருக்கடி
கிளிநொச்சியின் மேற்கு பிரதேசத்தில் உள்ள பொது மக்களின் அத்தியாவசிய சேவைகள் மற்றும் விவசாய நடவடிக்கையினை மேற்கொள்ள எரிபொருள் இன்மையால் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியியுள்ளனர்.
எரிபொருள் வழங்கி வந்த அக்கராயன் பல நோக்கு கூட்டுறவு சங்கத்துக்குரிய எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் கிடைக்கவில்லை.
இதனால் இந்த பிரதேசத்தில் வாழும் மக்கள் 60 கிலோ மீட்டருக்கு அப்பால் சென்று தமக்கான பெட்ரோலை பெறவேண்டிய நிலை காணப்பட்டுள்ளது.
பொலிஸார் ஒழுங்குப்படுத்தல்
கரைச்சி பிரதேச செயலாளர், உத்தியோகத்தர்கள் மற்றும் பலநோக்கு கூட்டுறவு சங்க பொது முகாமையாளர் தலைவர் அக்கராயன்குளம் பொலிஸாரின் ஒழுங்குபடுத்தலில் நேற்றைய எரிபெருள் விநியோகம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
எரிபொருள் விநியோகத்தின் புதிய முறை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல் |
கிளிநொச்சி - இயக்கச்சி
கிளிநொச்சி - இயக்கச்சி பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மூன்று பிரதேச செயலாளர்களின் கண்காணிப்பில் எரிபொருள் விநியோகம் அமைதியாக இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மக்களுக்கும், கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஆனையிறவு தட்டுவன் கொட்டி பிரதேச மக்களுக்குமே இன்று(25) வழங்கப்பட்டது.
யாழ்ப்பாணம்
வடமாராட்சி - கிழக்கில் உள்ள குடாரப்பு, மாமுனை, செம்பியன்பற்று வடக்கு, தனிப்பனை, மருதங்கேணி, வத்திராயன், உடுத்துரை, கொடுக்குழாய், ஆழியவளை, வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு, முள்ளியான், கேவில் ஆகிய 14 கிராம சேவையாளர் பிரிவுகளை சேர்ந்த மக்களுக்கும் எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
[U3T8T ]
எரிபொருள் விநியோக நடவடிக்கையானது பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் எஸ்.கிருஸ்ணேந்திரன், மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரபாகரமூர்த்தி, மற்றும் கண்டாவளை பிரதேச செயலாளர் ரி.பிருந்தாகரன் ஆகியோரின் கண்காணிப்பிலேயே இடம்பெற்றுள்ளது.
இதன்போது எரிபொருள் விநியோக அட்டை பதிவுகள் மேற்கொள்ளப்பட்டதுடன், கிராம சேவையாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொலிஸார், பிரதேசத்திற்கு பொறுப்பான இராணுவத்தினர் உள்ளிட்டோர் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
செய்தி: தீபன்
மட்டக்களப்பு
மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளிலும் எரிபொருட்கள் வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு - மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திமிலை தீவு கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச்சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்திலே இன்று(25) எரிபொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த இரண்டு மாதங்களின் பின்னரே இன்றைய தினம் எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு எரிபொருட்கள் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன.
கூட்டுறவு சங்கத்தின் முகாமைத்துவத்தின் கண்காணிப்பில் மண்முனை, வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் வழிநடத்தலின் கீழ் இந்த எரிபொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
செய்தி:குமார்