எரிபொருள் விநியோகத்தின் புதிய முறை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
எரிபொருள் விநியோகத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய திட்டமான எரிபொருள் விநியோக அட்டை முறை அல்லது QR முறை தொடர்பில் தகவலொன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி தேர்ந்தெடுக்கப்பட்ட சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மட்டும் இன்றைய தினம் குறித்த நடைமுறை முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிலையத்தின் பணிப்பாளர் தசுன் ஹகொட கூறுகையில், இந்த முன்னோடித் திட்டத்தை நாடு முழுவதும் பல கட்டங்களாக விரிவுபடுத்துவதே எமது நோக்கம்.
இந்த திட்டம் தேர்வு செய்யப்பட்ட சில இடங்களில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பை சுற்றியுள்ள பல பகுதிகளில் இத்திட்டத்தை நாங்கள் நடைமுறைப்படுத்தினோம்.
மேலும், 25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய 25 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முன்னோடித் திட்டத்தை நடத்தினோம்.
இதில் பெறப்பட்ட தகவல்களை கணினியில் உள்ளிட்டு அடுத்த சில நாட்களில் இந்த முறையை செயற்படுத்த எதிர்ப்பார்த்துள்ளோம். இந்த முறையை இன்று முதல் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், தற்போதைய சூழ்நிலையில், இன்றும் இது ஒரு முன்னோடித் திட்டமாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இதனை நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்த இன்னும் சில நாட்கள் ஆகும் என குறிப்பிட்டுள்ளார்.
எரிசக்தி அமைச்சரின் தகவல்
எனினும் நாடளாவிய ரீதியில் இன்று முதல் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறையின் மூலம் எரிபொருள் விநியோகம் இடம்பெறும் என்று அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக இந்த நடைமுறை முன்னெடுக்கப்படவுள்ளது.
பரீட்சார்த்தமான முறையில் QR குறியீட்டின் கீழ் எரிபொருள் வழங்கும் நடைமுறை வெற்றியளித்துள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுவதும் இன்று புதிய நடைமுறையின் கீழ் எரிபொருள் விநியோகம் |
பரீட்சார்த்த நடைமுறையின் கீழ் 4,708 வாகனங்கள் வெற்றிகரமாக எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக வழிவகைகள் செய்யப்பட்டதாக அமைச்சர் குறிப்பிடுகிறார்.
அதேவேளை QR குறியீட்டினை பெறாதவர்கள் வீணாக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
QR குறியீட்டை ஸ்கேன் செய்யும் வாகனங்களுக்கு இன்று வாகன பதிவு எண்ணின் கடைசி இலக்கத்தின் படி எரிபொருள் வழங்கப்படும். இன்று திங்கட்கிழமை 6, 7, 8 மற்றும் 9 ஆகிய எண்களைக் கொண்ட வாகன உரிமையாளர்களுக்கு மட்டுமே எரிபொருள் பெற முடியும்.
வாகனத்தின் பதிவு இலக்கத்தின் கடைசி எண் 0 - 1 அல்லது 2 ஆக இருந்தால், செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில், கடைசி எண்கள் 3 - 4 - 5 ஆகவும், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், கடைசி எண்கள் 6 - 7 - 8 - 9 ஆகவும் இருந்தால், திங்கள் - புதன் - வெள்ளிக்கிழமைகளில் இருந்து எரிபொருளைப் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.