ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு: ஜப்பான் பிரதமர் எச்சரிக்கை
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது நடத்தி வரும் போரின் காரணமாக, ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளமை ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் "மிகப்பெரிய பாதிப்பை" ஏற்படுத்தியுள்ளதாக ஜப்பான் பிரதமர் சானே டகாய்ச்சி எச்சரித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவிற்கு மூன்று நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், அந்நாட்டுப் பிரதமர் அந்தோணி அல்பானீஸை சந்தித்துப் பேசினார்.
அப்போது, உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு செல்லும் ஹோர்முஸ் நீரிணை பெப்ரவரி 28 முதல் முடங்கியுள்ளதால், எரிசக்தி விநியோகச் சங்கிலி முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கவலை தெரிவித்தார்.
எரிபொருள் தட்டுப்பாடு
இந்த நெருக்கடியைச் சமாளிக்க, எரிசக்தி மற்றும் முக்கியமான தாதுக்கள் விநியோகத்தில் இரு நாடுகளும் ஒத்துழைக்க புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

அவுஸ்திரேலியாவின் முக்கியமான கனிமத் திட்டங்களுக்கு சுமார் 1.3 பில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை வழங்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் செமிகண்டக்டர்கள் மற்றும் மின்சார வாகன பேட்டரிகளுக்குத் தேவையான கேலியம், நிக்கல், கிராஃபைட் போன்ற தாதுக்கள் ஜப்பானுக்குத் தடையின்றி கிடைப்பது உறுதி செய்யப்படும்.
பாதுகாப்புத் துறை
மேலும், பாதுகாப்புத் துறையிலும் இரு நாடுகளும் தங்கள் ஒத்துழைப்பை அதிகரித்துள்ளன.
இதன் ஒரு பகுதியாக, ஜப்பானின் 'மொகாமி' ரகப் போர்க்கப்பல்களை அவுஸ்திரேலிய கடற்படைக்கு வழங்க 7 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான ஒப்பந்தமும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

எரிசக்தி மற்றும் பாதுகாப்பு ரீதியாக ஆசிய பிராந்தியத்தில் நிலவும் இந்த அசாதாரண சூழல் உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தவெக பல தொகுதிகளில் முன்னிலை வகித்தாலும்..! 10 தொகுதிகளின் நிலவரம் - இறுதி முடிவுகளில் மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு
அதிரவைக்கும் வாக்கு எண்ணிக்கை..! முன்னிலை வகிக்கும் தவெக - வேட்பாளர்களை பாதுகாக்க விஜய் அவசர ஏற்பாடுகள்