உலக எண்ணெய் சந்தையில் பரபரப்பு: உற்பத்தியை உயர்த்த ஒபெக் பிளஸ் கூட்டமைப்பு அதிரடி முடிவு
ஹோர்முஸ் நீரிணை மூடல் மற்றும் அமெரிக்க-இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ஒபெக் பிளஸ் கூட்டமைப்பு ஜூன் மாதத்திற்கான எண்ணெய் உற்பத்தியை ஓரளவுக்கு அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
நேற்றையதினம்(3.5.2026) நடைபெற்ற மெய்நிகர் கூட்டத்தில், சவூதி அரேபியா உள்ளிட்ட ஏழு முக்கிய நாடுகள் இணைந்து தினசரி 188,000 பெரல்களைக் கூடுதலாக உற்பத்தி செய்ய ஒப்புக்கொண்டன.
உலகளாவிய எண்ணெய் சந்தையை நிலைப்படுத்துவதில் தங்களுக்கு இருக்கும் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணை
அல்ஜீரியா, ஈராக், கஜகஸ்தான், குவைத், ஓமன், ரஷ்யா மற்றும் சவூதி அரேபியா ஆகிய ஏழு நாடுகள் இந்த முடிவை எடுத்துள்ள நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அமைப்பிலிருந்து வெளியேறுவதாக அறிவித்த ஐக்கிய அரபு இராச்சியம் பற்றி இந்த அறிக்கையில் எவ்விதக் குறிப்பும் இடம்பெறவில்லை.

போர் முடிவுக்கு வந்த பிறகு விநியோகத்தை அதிகரிக்கத் தயாராக இருப்பதை உலக நாடுகளுக்குக் காட்டவே இந்த 'அடையாளபூர்வ' உற்பத்தி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சவூதி அரேபியாவின் உற்பத்தி ஒதுக்கீடு 10.291 மில்லியன் பெரல்களாக உயர்த்தப்பட்டுள்ளது. ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டிருப்பதால் சவூதி அரேபியா, ஈராக் மற்றும் குவைத் ஆகிய நாடுகளின் ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
பணவீக்க உயர்வு
இதன் விளைவாக மசகு எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 125 டாலராக உயர்ந்துள்ளது, இது கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத உச்சமாகும்.

நீரிணை மீண்டும் திறக்கப்பட்டாலும், எண்ணெய் விநியோகம் இயல்பு நிலைக்குத் திரும்ப வாரங்கள் அல்லது மாதங்கள் ஆகலாம் என எரிசக்தி நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்தச் சூழலில், ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளியேற்றம் மற்றும் உலகளாவிய பணவீக்க உயர்வு ஆகியவை ஒபெக் பிளஸ் அமைப்பிற்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026