எரிபொருள் தட்டுப்பாடு: நாடளாவிய ரீதியில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் (Photos)
நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் நோக்கில் ஒவ்வொரு பிரதேசங்களிலும் உரிய அதிகாரிகளினால் பல்வேறு மாற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம்
யாழ். மாவட்டத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிபொருளை பெற்றுக்கொள்ள விசேட ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண பேக்கரி உற்பத்தியாளர் சங்க தலைவர் மற்றும் பிரதிநிதிகள் யாழ். மாவட்ட செயலகத்திடம் பேக்கரி உற்பத்திப் பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்வதில் எரிபொருளை பெற்றுக்கொள்வது தொடர்பாக எதிர்கொண்ட இடர்பாடுகள் தொடர்பாக முன்வைத்த கோரிக்கைக்கு தீர்வாக இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே பேக்கரி உற்பத்தியாளர்கள் தங்களது பேக்கரி சங்கம் ஊடாக தொடர்பு கொண்டு உற்பத்தி விற்பனையை தடையின்றி மேற்கொள்ள மட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாண மாவட்டத்தில் எரிபொருள் விநியோகத்தினை சீராக்குவதற்கு இணைய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இணைப்பின் ஊடாக தங்களது ஸ்மாட் தொலைபேசி, கணணி மூலம் எரிபொருளுக்கான கோரிக்கையினை முன்வைக்க முடியும்.
எரிபொருள் கிடைக்கப்பெறும் போது பொதுமக்களுக்கு எரிபொருள் பெறுவதற்கான திகதி, நேரம் என்பன பதிவுசெய்யப்பட்ட தொலைபேசி இலக்கத்திற்கு குறுஞ்செய்தி மூலமாக அறிவிக்கப்படும்.
பொதுமக்கள் குறித்த நேரத்தில் தங்களுக்குரிய எரிபொருளை பெற்றுக்கொள்ளமுடியும். குறித்த எரிபொருள் கோரிக்கைக்கான விண்ணப்பத்தினை மாவட்ட செயலக இணையதளத்தின் ஊடாகவும் அணுக முடியும்.
இவ்வாறு இதனை பயன்படுத்த முடியாதவர்கள் கிராம உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்புகொண்டு அதனை அணுகமுடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மன்னார்
மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இன்றுகாலை முதல் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட கிராமங்களுக்கு விநியோகிக்கப்பட்ட எரிபொருள் (பெட்ரோல்) விநியோகத்தில் திடீர் தடங்கல் ஏற்பட்டுள்ளது.
எனினும் குறித்த தடங்கள் நிவர்த்தி செய்யப்பட்ட நிலையில் நாளை காலை முதல் தடைப்பட்டுள்ள கிராமங்களுக்கான எரிபொருள் விநியோகம்(பெட்ரோல்) மேற்கொள்ள துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என மன்னார் பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.
பல்வேறு தடங்களுக்கு மத்தியில் எரிபொருள் விநியோகிக்கப்பட்ட போதிலும் குறித்த எரிபொருள் நிலையத்தில் எரிபொருளை வழங்கும் பம் அதிகூடிய வெப்பம் அடைந்ததன் காரணத்தினால் தொடர்ச்சியாக எரிபொருளை வழங்க முடியாத நிலையில் தடங்கல் ஏற்பட்டது.
குறித்த விடயம் தொடர்பாக வரிசையில் நின்ற மக்களுக்கு தெரியப்படுத்திய நிலையில் மக்கள் உண்மை நிலையை அறிந்து கொண்டு அங்கிருந்து சென்றுள்ளனர். .எனினும் இன்றைய எரிபொருள் வழங்கும் திட்டத்தில் மேலும் சில கிராமங்களுக்கு தடங்களின் மத்தியில் பெட்ரோல் வழங்கப்படவில்லை.
அதற்கு அமைவாக நாளை காலை முதல் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டு விடுபட்ட கிராம மக்களுக்கு எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உப்புக்குளம் தெற்கு,பெரியகடை,பெற்றா,சாவற்கட்டு,சின்னக்கடை ஆகிய 5 கிராம அலுவலகர் பிரிவுகளுக்கும் காலை 8.30 மணி முதல் இரவு 8 மணி வரை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த கிராம மக்கள் தமக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு சென்று தம் வாகனங்களுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்தி: அஷிக்
பருத்தித்துறை
கடந்த நான்கு நாட்களாக பருத்தித்துறை சாலையிலிருந்து தனியார் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகளுக்கு டீசல் வழங்கப்படமையால் வடமராட்சி தனியார் பேருந்து சேவை சங்கம் இன்றிலிருந்து பேருந்து சேவைகளை குறைத்துள்ளது.
பருத்தித்துறையிலிருந்து 15 நிமிடத்திற்கு ஒரு தடவை இடம் பெற்று வந்த 750 வழித்தடமான யாழ்ப்பாணம் பருத்தித்துறை பேருந்து இன்று 30 நிமிடத்திற்கு ஒரு சேவையாக குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் பயணிகள் மற்றும் பேருந்து உரிமையாளர்கள், நடத்துநர்கள், சாரதிகள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதே வேளை பருத்தித்துறை சாலைக்கு இன்றைய தினம் டீசல் தாங்கி மூலம் டீசல் கொண்டுவரப்பட்டு நிரப்பப்பட்டுள்ளது.
டீசல் வழங்க வேண்டாமென மேலிடத்திலிருந்து வந்த உத்தரவிற்க்கு அமையவே
தங்களால் தனியார் போக்குவரத்து சேவைக்கு டீசல் வழங்க முடியாத. நிலை
ஏற்பட்டுள்ளதாக பருத்தித்துறை சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
முல்லைத்தீவு
முல்லைத்தீவில் காணப்படும் லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையம் முள்ளியவளை லங்கா ஐ.ஓ.சி எரிபொருள்நிரப்பு நிலையத்தில் இன்று கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்டகிராமங்களுக்கு கிராம அலுவலகரின் பதிவின் கீழ் டோக்கன் அடிப்படையில் பெட்ரோல் விநியோகிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பெட்ரோலினை பெற்றுக்கொள்ள சில பிரதேசங்கள் பத்து கிலோமீற்றருக்கும் தூரமாக காணப்படுவதால் வாகனம் ஒன்றில் நான்கு மோட்டார்சைக்கில்களை ஏற்றிவந்து பெட்ரோல் நிரப்பியுள்ள காட்சி பதிவாகியுள்ளது.
முல்லைத்தீவு அரசஉத்தியோகத்தர்கள் மற்றும் வங்கிகளில் பணியாற்றுபவர்கள் அத்தியவசியத் தேவையில் ஈடுபடுபவர்களுக்கு மாவட்ட அரசாங்க அதிபரின் அனுமதியுடன் முள்ளியவளை லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் வழங்கப்பபட்டு வருகின்றது.
விமானப்படையினரின் கண்காணிப்பில் இந்த எரிபொருள் விநியோகம் சீரான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்தி: கீதன்











