உலக சந்தையைவிட அதிக விலைக்கு எரிபொருள் இறக்குமதி செய்துள்ள இலங்கை! முறையற்ற தீர்மானங்களால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி
தற்போது உலக சந்தை விலையை விட அதிக விலைக்கு எரிபொருளைக் கொள்வனவு செய்ய வேண்டிய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சியின் காரியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பொருளாதார நெருக்கடி
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தற்போதைய அரசாங்கம் நாட்டு மக்களுக்கு அடுக்கடுக்கான பொய்களைக் கூறி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது. தற்போதைய வரிக்கொள்கை மற்றும் அரசாங்கத்தின் முறையற்ற தீர்மானங்களால் மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர். அரசாங்கத்தினால் ஏற்படும் நட்டங்கள் அனைத்தும் மக்கள் மீதே சுமத்தப்படுகின்றது.
குறிப்பாக, எரிபொருள் விவகாரத்தில் 45 நாட்களுக்குப் போதுமான கையிருப்பு இருப்பதாக முன்னதாகக் கூறிவிட்டு, தற்போது உலக சந்தை விலையை விட அதிக விலைக்கு எரிபொருளைக் கொள்வனவு செய்ய வேண்டிய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது.

ஒரு அணியாகச் செயற்பட்டு நாட்டுக்காக வேலை செய்ய வேண்டிய அரசாங்கம், பழைய அணிகளைக் குற்றம் சுமத்தித் தனது தோல்விகளை மறைக்க முயலக் கூடாது.
மேலும், நாட்டின் புலனாய்வுப் பிரிவுகள் பலவீனப்படுத்தப்பட்டுள்ளதால் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் எழுந்துள்ளன, ஊழலுக்கு எதிராகப் பேசுவதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று பல்வேறு முறைகேடுகளில் சிக்கியுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.