எரிபொருள் விலை அதிகரிப்பில் அரசு செய்யும் சதி.. முன்வைக்கப்பட்டுள்ள பகிரங்க குற்றச்சாட்டு
தற்போதைய ஆட்சியாளர்கள், மக்களிடம் இருந்து பல்வேறு வழிகளில் நிதியைச் சுரண்டி வருகின்றனர் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் ஒன்றிணைந்த தொழிற்சங்கக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித்த தெரிவித்தார்.
எரிபொருள் விலை உயர்வைத் தொடர்ந்து நேற்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "உலக நிலவரங்களையும் பிராந்திய மோதல்களையும் காரணம் காட்டி, கையிருப்பில் உள்ள பழைய எரிபொருள் இருப்புகளுக்கு அரசு தன்னிச்சையாக விலையை உயர்த்தியுள்ளது.
எரிபொருள் விலை அதிகரிப்பு
பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் அரசும் இணைந்து வெளிநாட்டுத் தனியார் நிறுவனங்கள் அதிக இலாபம் ஈட்டுவதற்கு வழிவகுத்து, மக்களிடம் இருந்து மறைமுகமாகப் பணத்தைப் பறித்து வருகின்றன.

மின்சாரக் கட்டணம் மற்றும் எரிபொருள் விலையை உயர்த்தும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், பெருந்தொகையை மானியமாக வழங்குவதாக அரசு போலி மாயையைத் தோற்றுவிக்கின்றது.
ஆனால், மக்களின் கைகளிலிருந்து வரிகள் மூலம் பெறப்பட்ட நிதியையே மீண்டும் மானியம் என்ற பெயரில் காட்டி, மக்கள் மீது இரட்டைச் சுமையைச் சுமத்துகின்றது.
நிலக்கரி கொள்முதலில் இடம்பெற்ற கோடிக்கணக்கான ஊழல்கள் மற்றும் முறைகேடான ஒப்பந்தங்களால் ஏற்பட்ட பெரும் நிதி இழப்புக்களை மூடிமறைக்கவும், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளைப் பாதுகாப்பதற்கவுமே இவ்வாறான சுமைகள் மக்கள் மீது சுமத்தப்படுகின்றன.