இலங்கை மக்களை நெருக்கும் சுமை! எரிபொருள் மானியம் நீண்டகாலம் சாத்தியமற்றது
அரசாங்கத்தினால் தற்போதைக்கு வழங்கப்பட்டு வரும் எரிபொருள் மானியம் நீண்ட கால அடிப்படையில் சாத்தியமற்றது என்று பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறிப்பாக எதுவித வரியும் அறவிடப்படாத நிலையில் ஒரு லீட்டர் டீசலை நாட்டிற்கு இறக்குமதி செய்வதற்கான செலவு அண்ணளவாக 410 ரூபாவாக இருப்பதால், தற்போதைய விலையான 392 ரூபாவுக்கு அதனை விற்பனை செய்வது நீண்ட கால அடிப்படையில் சாத்தியமில்லை என்று பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ வலியுறுத்தியுள்ளார்.
எரிபொருளுக்கான தேவையைக் குறைக்காது
எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும் கமிஷன் பணம் அல்லது எந்த வரியையும் சேர்க்காத நிலையில் கூட, தற்போதைய உலக சந்தை விலையின்படி ஒரு லீட்டர் டீசலின் விலை அண்ணளவாக 409 முதல் 410 ரூபா வரை உள்ளது என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
அத்தகைய சூழ்நிலையில், 410 விலைமதிப்புள்ள ஒரு லீட்டர் டீசலை எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் 392 ரூபாவுக்கு விற்பனை செய்வது நடைமுறைக்கு சாத்தியமில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருளுக்கு அரசாங்கம் பெரும் மானியம் வழங்குவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தற்போது ஒரு லீட்டர் டீசலுக்கு சுமார் 100 ரூபாவும்இ ஒரு லீட்டர் பெட்ரோலுக்கு 20 ரூபாவும் மானியமாக வழங்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
இந்த மானியங்களுக்காக அரசாங்கம் மாதத்திற்கு 15 முதல் 20 பில்லியன் ரூபாய் வரை செலவிடுகிறது என்றும், இது ஆண்டுக்கு 200 முதல் 250 பில்லியன் ரூபாய் வரை உயரக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விலைகளைக் குறைவாக வைத்திருப்பது எரிபொருளுக்கான தேவையைக் குறைக்காது என்றும், அது டொலருக்கான தேவையைக் கட்டுப்படுத்துவதைத் தடுக்கும் என்றும் தனநாத் பெர்னாண்டோ கூறுகிறார்.
எரிபொருள் நுகர்வைக் குறைக்காமல் டொலர் நெருக்கடிக்குத் தீர்வு காண்பது கடினம் என்பதால், எரிபொருளுக்கான இதுபோன்ற நலத்திட்ட மானியங்கள் வழங்கப்படக்கூடாது என்றும் அவர் தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளார்.