ஐரோப்பாவிற்கான 20,000 விமான சேவைகள் இரத்து
அமெரிக்க - ஈரானியப் போர் காரணமாக விமான எரிபொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், சுமார் 20,000 குறுகிய தூர விமான சேவைகளை இரத்து செய்யவுள்ளதாக ஜெர்மனியின் லுஃப்தான்சா விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
போர் தொடங்கியதிலிருந்து விமான எரிபொருளின் விலை இருமடங்காக அதிகரித்துள்ளதே இந்த அதிரடி முடிவுக்குக் காரணமாகும்.
லுஃப்தான்சாவைத் தொடர்ந்து கே.எல்.எம் (KLM) மற்றும் டெல்டா (Delta) போன்ற முன்னணி நிறுவனங்களும் தங்களது சேவைகளைக் குறைத்துள்ளதுடன், எரிபொருள் செலவைச் ஈடுகட்ட பயணச்சீட்டுகளின் விலையையும் உயர்த்தியுள்ளன.
எரிபொருள் தட்டுப்பாடு
ஐரோப்பாவிற்குத் தேவையான விமான எரிபொருளில் சுமார் 50 சதவீதம் வளைகுடா நாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது.
குறிப்பாக, ஈரானால் தற்போது மூடப்பட்டுள்ள ஹோர்முஸ் நீரிணை வழியாகவே இந்த விநியோகம் நடைபெறுகிறது.

குவைத்தின் அல்-ஸூர் சுத்திகரிப்பு நிலையம் மட்டுமே ஐரோப்பாவின் 10 சதவீதத் தேவையைப் பூர்த்தி செய்கிறது.
இந்த விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளதால், இன்னும் சில வாரங்களில் ஐரோப்பாவில் விமான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என சர்வதேச எரிசக்தி முகமை எச்சரித்துள்ளது.
விமான சேவை இரத்து
தமது நிறுவனத்தின் 'சிட்டி-லைன்' சேவையை நிரந்தரமாக மூடும் பணியை லுஃப்தான்சா துரிதப்படுத்தியுள்ளதுடன், இதன் மூலம் சுமார் 40,000 மெட்ரிக் தொன் எரிபொருளைச் சேமிக்க முடியும் எனத் தெரிவித்துள்ளது.

முதற்கட்டமாக ஜெர்மனியின் பிராங்பேர்ட் நகரிலிருந்து நோர்வே மற்றும் போலந்து போன்ற நாடுகளுக்கான 120 விமானங்கள் நேற்று இரத்து செய்யப்பட்டன.
போர் நீடிக்கும் பட்சத்தில் விமானப் பயணக் கட்டணங்கள் மேலும் உயரக்கூடும் எனப் பொருளாதார ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.