பிரித்தானியாவில் புகையிலை பாவனைக்கு தடை!
பிரித்தானியாவில் 2009 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி அல்லது அதற்குப் பின்னர் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாளில் ஒருபோதும் புகையிலைப் பொருட்களை வாங்குவதற்குத் தடை விதிக்கும் புதிய சட்டமூலம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
'புகையிலை மற்றும் வேப் சட்டமூலம்' எனும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சீர்திருத்தத்தை சுகாதாரத் துறைச் செயலாளர் வெஸ் ஸ்ட்ரீட்டிங் அறிமுகப்படுத்தினார்.
அடுத்த வாரம் அரச அங்கீகாரம் பெற்றவுடன் இது சட்டமாக மாறும்.
தடை
இதன் மூலம் தற்போது 17 வயது அல்லது அதற்குக் குறைந்த வயதுடையவர்கள் பிரித்தானியாவில் சட்டப்பூர்வமாகப் புகையிலைப் பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்படும்.

இந்தச் சட்டத்தின் கீழ், சிறுவர் விளையாட்டு மைதானங்கள், பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகளுக்கு வெளியே 'வேப்பிங்' (Vaping) எனப்படும் மின்-சிகரெட் பயன்பாட்டிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிகரெட் பழக்கத்தினால் இங்கிலாந்தில் மட்டும் ஆண்டுதோறும் சுமார் 64,000 உயிரிழப்புகள் ஏற்படுவதுடன், தேசிய சுகாதார சேவைக்கு (NHS) சுமார் 3 பில்லியன் பவுண்டுகள் செலவாகிறது.
சுகாதார அமைப்புகள்
இந்தச் சட்டத்தை நாட்டின் முக்கிய சுகாதார அமைப்புகள் வரவேற்றுள்ள நிலையில், இது அடுத்த சந்ததியினரை புற்றுநோய் மற்றும் இதய நோய்களிலிருந்து பாதுகாப்பதற்கான ஒரு மாபெரும் சுகாதார நடவடிக்கை என வர்ணிக்கப்படுகிறது.

இருப்பினும், வலதுசாரி அரசியல் தரப்பினர் தனிமனித சுதந்திரத்தைக் காரணம் காட்டி இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.