எரிபொருள் விநியோகஸ்தர்களின் நிபந்தனை:விநியோகம் ஸ்தம்பிக்கும் நிலை
இலங்கைக்கு இதுவரை எரிபொருளை விநியோகித்து வந்த ஏழு விநியோகஸ்தர்களுக்கு செலுத்த வேண்டிய 655 மில்லியன் டொலர் நிலுவை பணத்தை செலுத்தும் விதம் தொடர்பான திட்டத்தை முன்வைக்கும் வரை எரிபொருள் விநியோகம் நடைபெறாது என அந்த விநியோகஸ்தர்கள் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளனர்.
அரசாங்கம் வாக்குறுதியளித்தால் விநியோகத்தை ஆரம்பிக்கலாம்
655 மில்லியன் டொலர் நிலுவை பணத்தில் 300 மில்லியன் டொலர்களை போட்ரோ சைனா நிறுவனத்திற்கு செலுத்த வேண்டியுள்ளது.
இதனை தவிர மேலும் ஆறு விநியோகஸ்தர்களுக்கு 355 மில்லியன் டொலர் நிலுவை பணத்தை செலுத்த வேண்டியுள்ளது.
கடனை செலுத்தும் திட்டத்துடன் சிறிய தவணை பணத்தையேனும் செலுத்துவதாக அரசாங்கம் வாக்குறுதி வழங்கினால், எரிபொருள் விநியோகத்தை மீண்டும் ஆரம்பிக்க தயாராக இருப்பதாக இந்த சர்வதேச எரிபொருள் விநியோகஸ்தர்கள் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளனர்.
அவசர தேவைக்கா தனியார் நிறுவனங்களிடம் இருந்து எரிபொருளை கொள்வனவு செய்யும் அரசாங்கம்
இதனிடையே வெளிநாட்டு கப்பல்கள் மற்றும் கைத்தொழில் நிறுவனங்களுக்கு டீசலை விநியோகிக்கும் ஆறு தனியார் நிறுவனங்களிடம் அவசர தேவைக்காக எரிபொருளை கொள்வனவு செய்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
அரசாங்கத்தின் சிறப்பு அனுமதிப்பத்திரத்தின் கீழ் எரிபொருளை இறக்குமதி செய்யும் பங்கரின் நிறுவனங்களான ஜோன் கீல்ஸ், ஹேலீஸ், இந்திய எண்ணெய் நிறுவனம்,மெக்லரன்ஸ் நிறுவனம், சினோபெக் நிறுவனம், டெல்மேஜ் நிறுவனம் ஆகியன டீசலை இறக்குமதி செய்து வருகின்றன.
இந்த நிறுவனங்களின் களஞ்சியங்களில் சுமார் 15 ஆயிரம் மெற்றி தொன் டீசல் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. துறைமுகங்களுக்கு வரும் கப்பல்களுக்கு எரிபொருளை விநியோகிப்பதற்கே இந்த நிறுவனங்கள் முன்னுரிமை வழங்கி வருகின்றன.
அத்துடன் டொலர்களை செலுத்தி எரிபொருளை கொள்வனவு செய்யும் தேசிய நிறுவனங்களுக்கும் இந்த நிறுவனங்கள் எரிபொருளை விநியோகித்து வருகின்றன.
இந்த நிலையில் அரசாங்கம் ஆரம்ப கட்டமாக 11 மில்லியன் டொலர்களை செலுத்தி இந்திய எண்ணெய் நிறுவனத்திடம் இருந்து 7 ஆயிரத்து 500 மெற்றி தொன் டீசலை கொள்வனவு செய்துள்ளது.