வழமைக்கு திரும்பும் எரிபொருள் விநியோகம்! - அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு
நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகம் நாளை (9) மற்றும் நாளை மறுதினம் (10) வழமைக்கு திரும்பும் என எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார்.
எரிசக்தி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அவர், இன்றைய தினம் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இரண்டு கப்பல்களில் இருந்து இறக்கப்பட்ட எரிபொருள் இருப்புக்கள் தற்போது எரிபொருள் நிலையங்களுக்கு விநியோகிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், இன்றைய தினமும் நாடளாவிய ரீதியில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசைகள் காணப்பட்டன.
இதேவேளை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) அதிக தேவை காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட டீசல் கையிருப்புகளை மட்டுமே தொடர்ந்து விநியோகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.