எரிபொருள் நெருக்கடிகளால் சிக்கி தவிக்கும் மக்கள்: போராடும் வாழ்க்கை (Video)
திருகோணமலை
எரிபொருள் இன்மையால் திருக்கோணேச்சரம் ஆலய வெளிப்பகுதி வியாபாரிகள் பாதிப்பு எரிபொருள் இன்மையால் திருக்கோணேச்சரம் ஆலய வெளிப்பகுதி வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றானா வரலாற்று சிறப்பு மிக்க திருக்கோணேச்சரம் ஆலயத்திற்கு அதிகளவான மக்கள் சென்று வழிபடுவதுடன், சுற்றுலா பிரயாணிகளும் அங்கு அதிகளவில் சென்று வருகின்றமையானது வழக்கமானது.
இந்த நிலையில் தற்பொழுது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக அங்கு மக்கள் செல்வது மிகக்குறைவாக காணப்படுகின்றது. சுற்றுலா பிரயாணிகளும் இதற்கு விதிவிலக்கல்ல.
இதனால் கோவில் வணக்க பகுதிக்கு வெளியே காணப்படும் வர்த்தக நிலையங்கள் பல பூட்டப்பட்டு காணப்படுகின்றது.
வருமானம் இன்றி தவிக்கும் வியாபாரிகள்
அதேவேளை, தமக்கு வர்த்தகம் மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாகவும், கிடைக்கும் வருமானம் நாளாந்த செலவுகளிற்கே போதுமானதாக இல்லை எனவும் அவர்கள் கவலை வெளியிடுகின்றனர்.
வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடும் பலர் அனுராதபுரம் உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான பாதிப்பு நாட்டின் பல பகுதிகளிலும் ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் பொருளாதார வீழ்ச்சியினால் வர்த்தகங்கள், சுயதொழில் முயற்சியாளர்கள், சுற்றுலா துறையினர் என பல்வேறு தரப்பினர் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
கொழும்பில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபன ஊழியர்கள் போராட்டம்:ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ள கடிதம் (Video) |
மன்னார்
மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இன்று காலை முதல் வாகனங்களுக்கான எரிபொருள் வழங்கப்பட்டது.
இராணுவம் மற்றும் கடற்படையின் உதவியுடன் மன்னார் பிரதேச செயலக பணியாளர்களின் மேற்பார்வையில் வாகனங்களுக்கு பெட்ரோல் விநியோகிக்கப்பட்டது.
மட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிபொருள்
மோட்டார் சைக்கிலுக்கு 1500 ரூபாவிற்கும்,முச்சக்கர வண்டிக்கு 2000 ரூபா விற்கும்,கார் உட்பட ஏனைய பெட்ரோல் வாகனங்களுக்கு 2500 ரூபாவிற்கும் எரிபொருள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் விநியோகிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் உள்ள ஏனைய எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருள் விநியோகிக்கப்படாமையினால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்தனர்.
இந்த நிலையிலே -மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்களுக்கு அனுமதிச்சீட்டு அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கப்பட்டது.
நீண்ட வரிசையில் நின்று அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் எரிபொருளை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
ஓட்டமாவடி
ஓட்டமாவடி பலநோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெட்ரோல் விநியோகத்தில் மோசடி இடம் பெறுவதாக தெரிவித்து நடத்தப்பட்ட மக்கள் போராட்டம் இன்று அதிகாலை அதிகாரிகளின் தலையீட்டின் பின்னர் முடிவுக்கு வந்தது.
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஊழல் இடம் பெறுவதாகவும் தொடர்ந்து இரவு நேரங்களில் தனிப்பட்டவர்களுக்கு எரிபொருள் வழங்கப்படுகின்றது என்று கூறி எரிபொருள் நிலையத்திற்கு முன்பாக ஒன்று கூடிய பொது மக்கள் இன்று அதிகாலை எதிர்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எரிபொருள் விநியோகம்
அவ் விடத்திற்கு வருகை தந்த வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடிய போது எரிபொருள் நிலையத்தில் உள்ள இருப்பை பொது மக்களுக்கு இன்று காலை காட்டுவதாக உறுதியளித்ததையடுத்து ஆர்ப்பாட்டத்தை கைவிட்டிருந்தனர்.
இன்று காலை எரிபொருள் நிலையத்திற்கு வருகை தந்த பெட்ரோலிய கூட்டுத்தாபன அதிகாரிகள், வாழைச்சேனை பொலிஸார், இராணுவத்தினர் கூட்டுறவு சங்க அதிகாரிகள் ஆகியோர் பொது மக்களுக்கு இருப்பை காண்பித்ததன் பின்னர் பொது மக்களுக்கு பெட்ரோலும் மண்ணெண்னையும் விநியோகிக்கப்பட்டது.
பெட்ரோல் 271 லீற்றர் இருப்பில் 270 லீட்டர் கட்டாயம் இருக்க வேண்டும் என்பதற்கமைய அறுபது லீட்டர் பெட்ரோல் முன்நூறு ரூபாய் வீதம் 94 நபர்களுக்கு விநியோகிக்கப்பட்டதுடன் மண்ணெண்ணை 1300 லீற்றர் இருப்பு இருந்ததுடன் அதில் ஆயிரம் லீட்டர் மண்ணெண்ணை முன்நூறு ரூபாய் வீதம் 290 நபர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
மலையகம்
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக டிக்கோயா நகரின் நிலைமை மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. முச்சக்கர வண்டி தரப்பிடம் மற்றும் நகரத்தின் பாதைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்த அளவிலேயே காணப்பட்டது என எமது செய்தியாளர் தெரிவித்தார்.