ரஷ்யா செல்லும் இரண்டு அமைச்சர்கள் உள்ளடங்கிய தூதுக்குழு
எரிபொருள் உட்பட ஏனைய விடயங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இரண்டு அமைச்சர்கள் உள்ளடங்கிய தூதுக்குழுவினர் நாளைய தினம் ரஷ்யாவுக்கு புறப்பட்டுச் செல்ல உள்ளனர்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார்.
கட்டார் செல்லும் மற்றுமொரு தூதுக்குழு
இதனை தவிர கட்டார் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மற்றுமொரு தூதுக்குழு கட்டார் புறப்பட்டுச் செல்ல உள்ளதாகவும் குவைத் அரசிடம் இருந்தும் சாதகமான பதில் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலைக்கு எரிபொருளை கொள்வனவு செய்வது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
அமெரிக்காவுடன் ராஜதந்திர முறுகல் ஏற்படும் என அஞ்சிய அரசாங்கம்
எனினும் ரஷ்யாவுடன் கொடுக்கல், வாங்கலில் ஈடுபடுவது அமெரிக்கா - இலங்கை இடையில் ராஜதந்திர முறுகலை ஏற்படுத்தலாம் என அரசாங்கம் அஞ்சுவதாகவும் கூறப்பட்டது.
ஆனால், இலங்கை தற்போது எதிர்நோக்கி வரும் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பொருளாதார நெருக்கடியில் ரஷ்யாவிடம் இருந்து உதவிகளை பெறுவதை அமெரிக்கா எதிர்க்காது என ஓமல்பே சோபித தேரர் நேற்று செய்தியாளர் சந்திப்பொன்றில் உறுதியாக கூறியிருந்தார்.