சூடானில் சுட்டுக் கொல்லப்பட்ட பிரான்ஸ் நாட்டவர்: தீவிரமடையும் மோதல்
சூடானில் இருந்து வெளியேறும் போது பிரான்ஸ் நாட்டவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக துணை இராணுவத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூடானில் இராணுவத்திற்கும், துணை இராணுவத்திற்கும் இடையிலான சண்டையில் இதுவரை 400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதுடன், 3,500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர். இந்நிலையில் பதற்ற நிலை தொடர்ந்து வருகிறது.
துப்பாக்கிச் சூடு
இந்நிலையில் இன்று காலை தூதரகத்திற்கு வெளியே இருந்த வாகனத் தொடரணி மீது இராணுவ விமானத்தில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் பிரான்ஸ் நாட்டவர் ஒருவர் கொல்லப்பட்டதாக சூடானின் சண்டையிடும் இரண்டு பிரிவுகளிடம் இருந்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் கார்ட்டூமில் இருந்து வெளியேறும் தூதரக கான்வாய் மீதான தாக்குதலுக்கு இரண்டு பிரிவினர்களும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
ஆனால் பிரான்ஸ் நாட்டவர் மீதான தாக்குதலுக்கு யார் பொறுப்பு என்று இதுவரை தெளிவாக விளக்கமளிக்கப்படவில்லை.
தாக்குதலில் ஒரு பிரான்ஸ் நாட்டவர் கொல்லப்பட்டு இருப்பதுடன், மேலும் ஒரு பிரான்ஸ் நாட்டவர் காயமடைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூடானை விட்டு வெளியேறும் பிரான்ஸ் நாட்டவர்
இந்த சம்பவத்தை பிரான்ஸ் இன்னும் உறுதிப்படுத்தவில்லை, ஆனால் சூடான் நாட்டிலிருந்து அதன் வெளியேற்றத்தை பிரான்ஸ் முன்னெடுத்து வருகிறது.
தனது நாட்டு தூதரக அதிகாரிகள், குடிமக்களை பாதுகாக்கும் நோக்கில் விரைவாக அவர்களை வெளியேற்ற தொடங்கி உள்ளது.
இதுபற்றி பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை அடிப்படையில், சி.என்.என். வெளியிட்டு உள்ள செய்தியில், சூடானில் இருந்து பிரான்ஸ் நாட்டு தூதரக அதிகாரிகள், குடிமக்களை அரசு விரைவாக வெளியேற்ற தொடங்கி உள்ளது என தெரிவித்து உள்ளது.
இந்த வெளியேற்ற நடவடிக்கையில், ஐரோப்பிய மற்றும் கூட்டணி நாடுகளின் குடிமக்களும் அடங்குவார்கள் என பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.
இதேபோன்று சூடானின் தலைநகர் கார்ட்டூமில் இருந்து ஈராக், இந்தியா, எகிப்து, கனடா, ஐக்கிய அரபு அமீரகம், பர்கினாபசோ, கத்தார் உள்ளிட்ட நாட்டு மக்களை சவுதி அரேபிய அதிகாரிகள் வெளியேற்றி வருகின்றனர்.