மொட்டு தனிவழி : களத்தில் தம்மிக பெரேரா
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (மொட்டுக் கட்சி) வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக நிற்காது. அது தனி வழி போகத் தீர்மானித்து விட்டதோடு அக்கட்சியின் சார்பில் பெரும்பாலும் கோடீஸ்வர வர்த்தகரான தம்மிக பெரேரா (Dhammika Perera) வேட்பாளராகக் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆயினும், இந்த முடிவை மொட்டுக் கட்சி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் முரண்பாடு ஏற்பட்ட காரணத்தால் முன்னெடுக்கின்றதா அல்லது அவருடன் சேர்ந்து திரைமறைவில் திட்டமிடப்பட்ட தந்திரோபாய ஏற்பாடுகளுக்கு அமைய இது நடக்கின்றதா என்பது தெரியவில்லை என தென்னிலங்கை செய்தி தகவல்கள் கூறுகின்றன.
கட்சியின் உயர்மட்டத் தரப்பு
சரியாக ஒரு வாரத்துக்கு முன்னர் கடந்த புதன்கிழமை காலை ஜனாதிபதியின் இல்லத்தில் ஜனாதிபதி ரணில், அவரின் உதவியாளர் சாகல ரத்நாயக்கா இருவரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச ஆகியோரை விருந்துபசாரத்துடன் சந்தித்துப் பேசினர்.

இந்தச் சந்திப்பின் பின்னரே, வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணிலை நேரடியாக ஆதரிப்பதில்லை, மொட்டு தனது சொந்த வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டதாக அறியவந்தது.
இந்தச் சந்திப்புக்குப் பின்னர், கட்சியின் உயர்மட்டத் தரப்பினரைச் சந்தித்த பசில் ராஜபக்ச, ''நான் மாப்பிள்ளையைத் (வேட்பாளரை) தருகின்றேன். நீங்கள் கல்யாணத்துக்கு (தேர்தலுக்கு) ஆயத்தமாகுங்கள்'' என்று பணிபுரை வழங்கினார் எனவும் அறியவந்தது.
இந்தச் சந்திப்புக்குப் பின்னர்தான், ''நான் ராஜபக்ஷக்களைப் பாதுகாக்க மாட்டேன். நீங்கள் நாட்டைக் காக்க என்னுடன் வந்து சேருங்கள்" என்ற அழைப்பை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் ஏனைய ஐக்கிய மக்கள் சக்தி பிரமுகர்களுக்கும் விடுத்தார் என்றும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
சிறுபான்மையினர்
மொட்டு தனிவழி போனாலும், இந்தத் தேர்தல் பிரசாரத்தில் ஜனாதிபதி ரணிலை கடுமையாக இலக்கு வைத்துத் தாக்காது என்றும் கூறப்பட்டது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் மொட்டுக் கட்சி அணி சேர்ந்தால், சிறுபான்மையினரான தமிழ் - முஸ்லிம் - மலையக மக்களின் வாக்குகளை ரணில் இழக்கவும், அந்த வாக்குகள் சஜித் பிரேமதாஸவுக்குக் கிட்டவும் வழி ஏற்படும் எனச் சுட்டிக்காட்டப்பட்டதாகத் தெரிகின்றது.

மொட்டுக் கட்சி ரணிலுக்கு ஆதரவான நிலை எடுத்தால், மொட்டுத் தரப்பில் உள்ள பாரம்பரியமான ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்பு சக்திகள் இந்த முறை தேர்தலில் தமது வாக்குகளை அநுரகுமார திஸநாயக்கவுக்குக் கொட்டித் தள்ளிவிடும் ஆபத்து உண்டு என்றும் சுட்டப்பட்டது.
இவற்றைக் கருத்தில்கொண்டு, மொட்டுக் கட்சி தனிவழி போகும் முடிவை ராஜபக்ஷக்களும் ரணில் விக்ரமசிங்கவும் இணக்கம் கண்டு எட்டினர் என்று சில நம்பகமான வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன.
மொட்டுக் கட்சி வரும் ஜனாதிபதித் தேர்தலில் தனி வழி போனாலும், தேர்தல் முடியும் வரை தற்போதைய அரசுக்கான ஆதரவை அது விலக்காது என்றும், தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வென்றால், இந்த நாடாளுமன்றத்தை கலைக்காமல் அதன் கடைசிக் காலம் வரை அதனை நீடிக்க அவர் அனுமதிப்பார் என்றும் இணக்கம் காணப்பட்டதாகவும் கூறப்பட்டது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri