இந்திய உயரஸ்தானிகரகம் மீது தாக்குதல் தொடர்பில் தகவல்! அரசியல் ஆய்வாளருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்துக்கு தகவல் வழங்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட லங்கா ஈ-நியூஸின் பாதுகாப்பு மற்றும் அரசியல் ஆய்வாளரான கீர்த்தி ரத்நாயக்கவை எதிர்வரும் ஜனவரி 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
ரட்நாயக்கவின் சார்பில் முன்னிலையான, சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும, தமது கட்சிக்காரரை அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
தனது கட்சிக்காரர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை தொடர முடியாது என அவர் தெரிவித்தார்.
இதனையடுத்து பிரதிவாதியின் கோரிக்கை தொடர்பிலான தீர்ப்பை அடுத்த விசாரணைத் திகதியில் கொழும்பு கோட்டை நீதவான் பிரியந்த லியனகே வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கீர்த்தி ரத்நாயக்க தனது கைது மற்றும் தடுப்புக்காவலை சவாலுக்கு உட்படுத்தி அடிப்படை உரிமை மீறல் மனுவையும் தாக்கல் செய்துள்ளார்.
அதில், 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் திகதி கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் மீது தீவிரவாத தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக, இந்தியாவில் வசிக்கும், இந்திய தேசிய புலனாய்வு பிரிவுடன் தொடர்பு கொண்ட இந்தியர் ஒருவரிடமிருந்து தனக்கு தகவல் கிடைத்தது என்று அவர் கூறியுள்ளார்.
அந்தத் தகவலால் தான் மிகவும் அச்சமும் அதிர்ச்சியும் அடைந்ததாகவும், ஒரு பொறுப்பானவராக, இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் பிரிவுத் தலைவருக்கு 2021 ஆகஸ்ட் 12 ஆம் திகதியன்று வாட்ஸ்எப் செய்தி மூலம் தெரிவித்ததாகவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் பிரிவுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட சம்பந்தப்பட்ட வட்ஸ்எப் செய்தி, கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் இந்திய அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் பின்னரே, இந்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் ரத்நாயக்க தமது மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், 2021 ஆகஸ்ட் 14ஆம் திகதியன்று தாம் கைது செய்யப்பட்டதாக கூறியுள்ள மனுதாரர், பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் ஜனாதிபதியினால் தமக்கான தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.

நடிகர் பிரதீப் ரங்கநாதனுக்கு போட்டியா? ஹீரோவாக களமிறங்கும் இளம் இயக்குநர்.. யார் தெரியுமா Cineulagam
