மூன்றாம் உலகப் போரின் அச்சம்: பிரான்ஸ் வெளியிடவுள்ள இரகசிய எச்சரிக்கை கையேடு
மேற்கு ஐரோப்பிய நாடான பிரான்ஸ், மூன்றாம் உலகப் போர் அச்சம் அதிகரித்து வரும் நிலையில், தப்பித்தல் தொடர்பான இரகசிய எச்சரிக்கை கையேடு ஒன்றை குடிமக்களுக்கு வழங்கவுள்ளது.
20 பக்கங்கள் கொண்ட இந்த கையேட்டில் 63 அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில், ஆயுத மோதல்கள், அணுசக்தி கசிவு மற்றும் இயற்கை பேரழிவுகள் உட்பட பல திகிலூட்டும் சூழ்நிலைகளில் தங்களையும் தங்கள் அன்புக்குரியவர்களையும் எவ்வாறு பாதுகாப்பது என்பது தொடர்பில் அதில் விளக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அறிவுறுத்தல்கள்
கோடை காலத்தில் கையேட்டின் சாத்தியமான வெளியீட்டிற்கு முன்னதாக ஐந்து முக்கிய குறிப்புகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன.
அதில் முதலாவதாக ஆறு லிற்றர் குடிநீர், அடிப்படை மருத்துவப் பொருட்கள், டின்னில் அடைக்கப்பட்ட உணவு, பற்றரிகள் மற்றும் சில பயங்கரமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் வகையில் ஒரு டார்ச் ஆகியவற்றைக் கொண்ட survival kit ஒன்றை தயார் நிலையில் வைக்குமாறு குடிமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து, பிரெஞ்சு மக்கள் உடனடித் தாக்குதல் ஏற்பட்டால் எவ்வாறு எதிர்கொள்வது தொடர்பில் விளக்கப்பட்டுள்ளது. அதில், உள்ளூர் தற்காப்புக் குழுக்கள் மற்றும் தீயணைப்புக் குழுக்களில் அவர்கள் எவ்வாறு பதிவு செய்யலாம் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், ஒரு அணு ஆயுத சம்பவம் ஏற்பட்டால், தங்கள் குடியிருப்பில் இருந்து வெளியேற வேண்டாம் எனவும் அந்த கையேட்டில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உக்ரைன் - ரஷ்ய போர்
இருப்பினும், பிரான்ஸின் இந்த நகர்விற்கு சமூக ஊடகங்களில் மக்கள் கடுமையாக கேலி செய்து வருவதுடன் அவசர உதவிக்கான தொலைபேசி இலக்கங்களையும் பட்டியலிடக் கோரியுள்ளனர்.
ரஷ்யாவின் உக்ரைன் மீதான போர் நீடித்து வருவதற்கு மத்தியில், போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் எதுவும் புடினால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில், பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக விளாடிமிர் புடினின் அணுகுமுறை உள்ளிட்ட காரணங்களால் பிரான்ஸ் நிர்வாகம் மக்களை தயார்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
அதேநேரம், உக்ரைன் மற்றும் ரஷ்யா தொடர்பான நெருக்கடிகளுக்கும் மக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலுக்கும் தொடர்பில்லை என்றே பிரான்ஸ் நிர்வாகம் கூறியுள்ளது.
பிரான்சின் இந்த நடவடிக்கை உலகிலேயே முதல் முறை அல்ல, ஸ்வீடன் மற்றும் பின்லாந்து நாடுகள் ஏற்கனவே தங்கள் சொந்த பதிப்புகளை வெளியிட்டுள்ளன.
ஸ்வீடன் போர் நெருக்கடி வந்தால் என்ற தலைப்பில் ஒரு 32 பக்க கையேட்டை தயாரித்து மொத்தம் ஐந்து மில்லியன் எண்ணிக்கையில் விநியோகித்துள்ளது.
இதற்கிடையில், பல பேரழிவுகளுக்கு மக்கள் எவ்வாறு தயாராக வேண்டும் என்பதை விளக்கும் ஒரு அரசாங்க வலைத்தளத்தை பின்லாந்து வெளியிட்டுள்ளமையும் சர்வதேச நாடுகளுக்கு மத்தியில் மூன்றாம் உலக போருக்கான அச்சத்தை அதிகரிக்கும் வகையில் உள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
