நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் பலர் கைது (Photos)
மட்டக்களப்பு - பிறந்துறைச்சேனை பிரதேசத்தில் ஹெரொயின் போதைப்பொருளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாவட்ட புலனாய்வு பிரிவுக்குக் கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது ஹெரொயின் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது அவர்களிடமிருந்து 50 மில்லிகிராம் ஹெரொயினும் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதில் கைது செய்யப்பட்டவர்கள் 25 தொடக்கம் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் என ஆரம்ப கட்ட விசாணைகளில் இருந்து தெரியவருகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் காத்தான்குடியில் இருந்து கருவப்பங்கேணி பிரதேசத்துக்கு முச்சக்கரவண்டியில் கேரளா கஞ்சாவைக் கடத்திச் சென்று விற்பனையில் ஈடுபட்ட இருவரை 90 கிராம் கேரளா கஞ்சாவுடன் கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாவட்ட புலனாய்வு பிரிவுக்குக் கிடைத்த தகவல் ஒன்றையடுத்து மட்டு தலைமையக பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவினருடன் மாவட்ட புலனாய்வு பிரிவினரும் இணைந்து சம்பவதினமான நேற்று பகல் 12 மணியளவில் குறித்த பகுதியில் உள்ள வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுவந்தனர்.
இதன்போது முச்சக்கரவண்டி ஒன்றில் கேரளா கஞ்சாவை வியாபாரத்துக்கு எடுத்து வந்த இருவரையும் மடக்கிப் பிடித்து கைது செய்ததுடன், அவர்களிடமிருந்து 90 கிராம் கேரளா கஞ்சாவையும் முச்சக்கரவண்டி ஒன்றையும் மீட்டனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்கள் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள மகிழடித்தீவு மற்றும் வீட்டுத்திட்டப் பகுதியைச் சேர்ந்த 46, 37 வயதுடையவர்கள் எனவும் காத்தான்குடி கர்ப்பலா பகுதியிலிருந்து கஞ்சாவை வாங்கிக்கொண்டு கருவப்பங்கேணி பிரதேசத்தில் விற்பனைக்கு எடுத்துச் சென்றதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அத்துடன் இவர்களை நீதிமன்றில் முன்னிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பு - சந்திவெளி பிரதேசத்திற்கு பேருந்து வண்டியில் கஞ்சாவைக் கடத்தி வந்து அதனை சந்திவெளி பகுதியிலுள்ள பற்றை காட்டுப் பகுதியில் விற்பனைக்காகப் பொதி செய்து கொண்டிருந்த நால்வரை 165 கிராம் கேரளா கஞ்சாவுடன் கைது செய்துள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான நேற்று மாலை குறித்த பற்றை காட்டுப் பகுதியைச் சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர்.
இதன் போது கேரளா கஞ்சாவை விற்பனைக்காகப் பொதி செய்து கொண்டிருந்த நாள்வரை 165 கிராம் கேரளா கஞ்சாவுடன் கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்கள் பளை இத்தாவில் பகுதியைச்சேர்ந்த 29,24,24,25 வயதுடையவர்கள் எனவும் இதில் ஒருவர் மட்டு கல்குடா பிரதேசத்தில் திருமணம் முடித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இவர்களை நீதிமன்றில் முன்னிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.













