வடக்கில் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் அமிர்தலிங்கத்தின் 34வது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு(Video)
மறைந்த, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 34வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
வலி.மேற்கு பிரதேச சபையின் முன்னால் உள்ள அன்னாரின் திருவுருவச் சிலையடியில் இன்றையதினம்(13.07.2023) குறித்த நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
இதன்போது அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து, சுடரேற்றி, மலர் அஞ்சலி தூவி நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.
நினைவு அஞ்சலி
இந்நிகழ்வில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, புளொட்டின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், கட்சிகளின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா
மேலும், வவுனியாவிலும் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 34வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) யின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் ஜி.ரி.லிங்கநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து கழகத்தின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது டன் செயலதிபர் க.உமாமகேஸ்வரன் அவர்களின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர், முன்னாள் நகரசபை மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள், கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மேலதிக தகவல் - ஷான்
வீரமக்கள் தினம்
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியினுடைய (புளொட்) வீரமக்கள் தினம் இன்றைய தினம்
வடமராட்சி இராஜ கிராமத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் இராஜகிராம இணைப்பாளர் சொக்கன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமாகிய த.சித்தார்த்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்ணனியின் வடமராட்சி இணைப்பாளர் பரஞ்சோதி மற்றும் சாவகச்சேரி நகர சபை உறுப்பினர் கிஷோர் உட்பட கட்சியின் ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் இலங்கை நாடாளுமன்றத்தின் முதல் தமிழ் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அ.அமிர்தலிங்கம் மற்றும் புளொட் அமைப்பின் தலைவர் உமாமகேஸ்வரன் ஆகியோருடைய திருவுருவ படங்களுக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டதோடு நினைவுச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்போது இராஜகிராம பிரதேசத்துக்கு உட்பட்ட முன்பள்ளிகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட சுமார் 60 முன்பள்ளி மாணவர்களுக்கு ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் லண்டன் கிளை உறுப்பினர் அல்வின் அவர்களின் நிதி பங்களிப்பில் கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |










