16 சமையல்காரர்கள் கோரிய முன்னாள் ஜனாதிபதி! அநுரவின் அதிரடி நடவடிக்கை
முன்னாள் ஜனாதிபதி ஒருவர் 16 சமையல்காரர்களை கோரி கடிதம் ஒன்று அனுப்பியதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கம்பஹாவில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகள் மக்களுக்கு சுமையாக மாறியிருந்தனர். முன்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 5 வருடங்களாகிவிட்டால் ஓய்வூதியம் வழங்கப்பட்டது. அதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டனர்.
அரசியல்வாதிகளுக்கு ஓய்வூதியம்
கிராமங்களில் 25 வயது இளைஞர்களுக்கு தொழில் இல்லை. ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 25 வயதில் ஓய்வூதியம் வழங்கப்படுகின்றது.

இதன் காரணமாக புதிய சட்டம் ஒன்றை கொண்டு வந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை நிறுத்தியுள்ளோம் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அடுத்தகட்டமாக முன்னாள் ஜனாதிபதிகளின் வீடுகளை மீளப்பெற்றோம். அரசியல்வாதிகளின் எரிபொருள் சலுகைகளை குறைத்தோம். மின்சாரம், நீர் கட்டணங்களை நிறுத்தினோம்.
இவ்வாறான நிலையில் பதவியை இழந்து சென்ற முன்னாள் ஜனாதிபதி ஒருவர் 16 சமையல்காரர்கள் வேண்டும் என கோடி கடிதம் ஒன்றை எமக்கு அனுப்பியிருந்தார்.
அரசியல்வாதிகளுக்கான சலுகைகள்
ஜனாதிபதி பதவி முடிந்ததும் உணவகம் தொடங்க போகிறாரோ என்னவோ தெரியவில்லை. ஒரு சமையல்காரரை கூடக் கொடுக்க மாட்டோம் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்கள் பெரியதொரு அரசியல் கலாச்சார மாற்றத்தை எதிர்பார்த்தார்கள். ஆனால் எமது அரசியல்வாதி பொதுமக்களுக்கு சுமையாக மாறினார்.
அரசியல் ஒரு வியாபாராக மாறியிருந்த நிலையில், அரசியல்வாதிகள் அதில் பல சலுகைகளை அனுபவித்து வந்தனர்.
இவ்வாறான நிலையில் அதனை மாற்றியமைத்து, மக்களுக்கான அரசாங்கமாக செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.