தென்னிலங்கையில் கர்ப்பிணிப்பெண் துரத்தித்துரத்தி படுகொலை - பின்னணி குறித்து பொலிஸார் தகவல்
தென்னிலங்கையில் கர்ப்பிணிப் பெண்ணொருவர் துரத்தித்துரத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் போதைப்பொருள் கும்பலின் பழிவாங்கும் செயற்பாடே உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பத்தேகம - ஹல்பேதொட்ட பிரதேசத்தில் நேற்று காலை முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த கர்ப்பிணித் தாய் ஒருவர் மற்றும் முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஆகியோர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர்.
பாதாள உலகக் கூலிப்படையினால் ரி-56 ரக துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கர்ப்பிணிப்பெண் படுகொலை
கரந்தெனிய சுத்தா எனப்படும் பாதாள உலகத் தலைவனின் உத்தரவுக்கமையவே இந்தத் கொலை மேற்கொள்ளப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட கர்ப்பிணித் தாயின் தாயாரும் முச்சக்கர வண்டியில் பயணித்துள்ளதுடன், அவரும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்ட கர்ப்பிணித் தாய், லொக்கு பெட்டி எனப்படும் பாதாள உலகத் தலைவனின் போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடைய பெண் என தெரியவந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட பெண் நீண்ட காலமாகச் சிறைவாசம் அனுபவித்துவிட்டு வெளியே வந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் இந்தக் கர்ப்பிணித் தாய், காலி மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவில் முன்னிலையாகி மீண்டும் தனது வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோதே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.
கொலைக்கான காரணம்
கரந்தெனிய சுத்தாவுக்கும், லொக்கு பெட்டிக்கும் இடையில் நீண்ட காலமாக நிலவிவரும் மோதலே இந்தத் தாக்குதலுக்கும் காரணமாகியுள்ளது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நீதிமன்ற உத்தரவுக்கமைய ஒவ்வொரு மாதமும் கடைசி வார ஞாயிற்றுக்கிழமை காலி மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவில் முன்னிலையாகி வந்த நிலையிலேயே குறித்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு கரந்தெனிய சுத்தாவின் மைத்துனர், லொக்கு பெட்டி தரப்பினரால் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதற்குப் பழிவாங்கும் நோக்கில் லொக்கு பெட்டி தரப்புப் பெண் ஒருவர் கரந்தெனியவின் சுத்தாவின் உத்தரவின் பேரில் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.